×

பஸ்சில் ₹3 கோடி தங்கம் கொள்ளை: வியாபாரி போல் பேசி நகைகளை மீட்ட போலீசார்

சேலம்: சேலம் அருகே தனியார் ஆம்னி பஸ்சில் ₹3 கோடி நகையை கொள்ளையடித்தது, மத்திய பிரதேச கொள்ளை கும்பல் என தெரியவந்துள்ளது. வியாபாரிகள்போல் பேரம் பேசி நகைகளை மீட்ட போலீசார் தப்பிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையின் கிளை, கோவையில் இயங்கி வருகிறது. இந்த கிளை கடைக்கு தேவையான தங்கம், வைர நகைகளை ஊழியர்கள் அவ்வப்போது ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ்சில் எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண் டுள்ளனர். இக்கடை ஊழியரான கவுதம் (25) கடந்த மாதம் 8ம் தேதி இரவு ₹3 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகளை எடுத்துக்கொண்டு, தனியார் ஆம்னி பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். அந்த ஆம்னி பஸ், மறுநாள் காலை சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் டோல்கேட் பகுதியில் பயணிகள் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது, கவுதம் இறங்கிச் சென்று சாப்பிட்டார். அந்த நேரத்தில் பஸ்சில் ஏறிய மர்மநபர், ₹3 கோடி மதிப்பிலான நகையை கொள்ளையடித்துச் சென்றார். இதுபற்றி சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க டிஎஸ்பி தங்கவேல், இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அதில், ஆம்னி பஸ்சில் ஏறி நகையை கொள்ளையடித்து சென்ற நபரின் உருவம், சிசிடிவி கேமராவில் சிக்கியது. அதனை கொண்டு தீவிர விசாரணையில் இறங்கினர். ஆம்னி பஸ்சை பின்தொடர்ந்து வந்த வண்டி குறித்து, வழியில் இருந்த சுங்கச்சாவடிகளில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் பல்வேறு இடங்களில் கிடைத்த சிசிடிவி காட்சிகளில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு கார் பின்தொடர்ந்து வந்தது தெரியவந்தது. அந்த காரில் வந்தவர்கள் தான், இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை தனிப்படை போலீசார் உறுதி செய்தனர். அந்த கார் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்கு சென்றனர். விசாரணையில், அங்குள்ள தார் மாவட்டம் மன்னாவர் அருகே உள்ள முல்தானிகேர்வா பகுதியை சேர்ந்த முஸ்தபா, அக்தர், முனீர், அகமதுகான், அஜய்ரத்தோர் ஆகிய 5 பேர் கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்தில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனிடையே கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வைர நகைகளை வியாபாரி போல் பேரம் பேசி வாங்கி மடக்கிப்பிடிக்கலாம் என தனிப்படை போலீசார் திட்டமிட்டனர். அதன்படி கொள்ளையர்களிடம் வைர வியாபாரிகள் போல் பேசி அக்கும்பலை நகைகளுடன் மத்திய பிரதேச மாநிலம் பரம்புரி மாவட்டம் காளிப்பாவடி என்ற இடத்திற்கு வரவழைத்தனர். அங்கு வைர நகைகளை விலைக்கு வாங்குவதுபோல் பேசி நகைகளை வாங்கிப்பார்த்தனர். அப்போது அவை கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தான் என தெரியவந்ததால் அவர்களை மடக்கிப்பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை தள்ளிவிட்டுவிட்டு காரில் ஏறி கொள்ளை கும்பல் தப்பியது. அவர்களை, தனிப்படை போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொள்ளையடிப்பது எப்படி?

நகை கொள்ளையர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அவரை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து போலீசார் விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு: ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பெரிய நகை கடைகள் முன் தள்ளுவண்டிகளில் பழம் உள்ளிட்ட வியாபாரம் செய்வது போல் கொள்ளையர்களின் கூட்டாளிகள் இருப்பார்கள். அவர்கள் யாரேனும் அதிக அளவில் நகை வாங்கிச்சென்றால் அதுபற்றி கொள்ளை கும்பலுக்கு தகவல் கொடுப்பார்கள். இதையடுத்து கொள்ளை கும்பல், நகை வாங்கிச் செல்பவர்கள் ஏறிச் செல்லும் பஸ்சை பின் தொடர்ந்து செல்வார்கள். அந்த பஸ், சாலையோர ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு நிற்கும்போது, பயணிகள் அனைவரும் இறங்கிய நேரத்தில் பஸ்சில் ஏறி நகைகளை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் வைகுந்தத்தில் ஆம்னி பஸ்சில் ₹1 கோடி பணமும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஆம்னி பஸ்சில் ₹50 லட்சம் பணமும் கொள்ளை போயுள்ளது. அந்த சம்பவங்களிலும் மத்திய பிரதேச கொள்ளை கும்பல் தான் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட நகைகள்

கொள்ளையர்களிடம் இருந்து 592 கிராம் எடையுள்ள 7 நெக்லஸ், வைரம் மற்றும் கலர் கற்கள் பதித்த சுமார் 287 கிராம் எடையுள்ள காதணி 14 செட், வைரம் மற்றும் கலர் கற்கள் பதித்த சுமார் 11 கிராம் எடையுள்ள மோதிரம் உள்ளிட்ட சுமார் ரூ.3கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : businessman Robbery , Robbery
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை