×

கோடை துவங்கும் முன்பே கொளுத்துது வெயில் முதல்வர் துவக்கிய திட்டத்தில் தண்ணீர் வரலை

விருதுநகர்: கோடை துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் 5 நாட்களுக்குள் பல ஊராட்சிகளுக்கு தண்ணீர் போய் சேராத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊரக பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சராசரி மழையளவான 820.1 மி.மீ என்ற அளவையும் தாண்டி 837.94 மி.மீ பெய்தது. கூடுதலாக மழை பெய்தாலும் மாவட்டத்தில் உள்ள 1024 கண்மாய்களில் 60 சதவீத கண்மாய்களுக்கு மழைநீர் சென்றடையவில்லை.

மாவட்டத்தின் 8 அணைகளில் பெரியார், கோவிலாறு, சாஸ்தா கோயில் அணைகளை தவிர மற்ற 5 அணைகளிலும் தண்ணீர் சொல்லும் அளவிற்கு இல்லை. நடப்பு 2020ம் ஆண்டு குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்ய வேண்டிய 42.8 மி.மீ மழையில் ஒரு மி.மீ மழை கூட பதிவாகவில்லை. மார்ச் மாதம் துவங்கி 5 நாட்களான நிலையில் மாவட்டத்தில் சாரல் மழை கூட இல்லை. மார்ச் 14ம் தேதி பங்குனி மாதம் துவங்க உள்ள நிலையில் முன்கூட்டியே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள 1024 கண்மாய்கள், 8 அணைகள் பாலம், பாலமாக வெடிப்புகள் விழுந்து கிடக்கின்றன. நிலத்தடி நீர் மட்டமும் மாவட்டத்தில் 300 அடிக்கு கீழ் சென்று விட்டது. கிராம ஊராட்சிகளில் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர் ஊராட்சி ஒன்றியங்களில் 755 ஊரக பகுதிகளுக்கு சீவலப்பேரியில் இருந்து வரும் தாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 1ல் திறந்து வைத்தார். முதல்வர் திறந்து 5 நாட்களாகியும் கிராம ஊராட்சிகள் தண்ணீர் போய் சேரவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால், முறையான பதில் இல்லை. பல இடங்களில் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சாலைகளில் ஓடுகிறது. திட்டம் முழுமை பெற்று அடைப்புகள் ஊராட்சிகளை சென்றடைய மாதங்களாகும் என கூறப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் கோடையை எதிர்கொள்ளும் வகையில் குடிநீர் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். வரும் ஆண்டுகளில் கண்மாய்கள், அணைகளில் மழைநீரை தேக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நீர்வரத்து பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : start ,chief minister ,Kaluttu Vail ,Burning Sun ,CM , Burning sun before summer starts The project started by CM
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...