×

ஆரணி நகராட்சியில் வாடகை செலுத்தாத தற்காலிக காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு `சீல்’

ஆரணி:  ஆரணி காய்கறி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நேற்று நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். ஆரணியில் நகராட்சி வளாகம் பின்புறம் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைத்து வியாபாரம் நடந்து வந்தது. இங்குள்ள 140 கடைகளுக்கு கடந்த 14 மாதங்களாக   வாடகை செலுத்தவில்லை. எனவே, வாடகையை உடனடியாக செலுத்துமாறு கடை உரிமையாளர்களிடம் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். பலமுறை அறிவுறுத்தியும் நகராட்சிக்கு ₹60 லட்சம் வரை பாக்கி இருந்தது. இதையடுத்து, அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், வாடகையை செலுத்தாததால், நகராட்சி வளாகம் பின்புறம் உள்ள அனைத்து கடைகளையும், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பூட்டி `சீல்’ வைத்தனர்.

இதனால் வியாபாரிகள், புதிதாக கட்டி சமீபத்தில் திறக்கப்பட்ட காய்கறி மார்க்கெட் கடைகளில், ஆணையாளரின் அனுமதியின்றி பொருட்களை வைத்து வியாபாரம் செய்தனர். தகவலறிந்த நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் கணேசன், மேலாளர் நெடுமாறன் மற்றும் அதிகாரிகள் சென்று, நிலுவை வாடகையை செலுத்தினால் மட்டுமே புதிய காய்கறி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கப்படும். அதுவரை யாருக்கும் கடைகள் கிடையாது. அனைவரும் வெளியேற வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள், வாடகை செலுத்த கால அவகாசம் கேட்டு கடைகளை காலி செய்யாமல் தொடர்ந்து வியாபாரம் செய்தனர். இதையடுத்து, புதிய காய்கறி மார்க்கெட்டை பூட்டி சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதனால் அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அனைவரையும் வெளியேற்றினர். பின்னர் புதிய காய்கறி மார்க்கெட்டிற்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் அனைத்து வணிகர்கள் சங்கத்தினர் உடனடியாக நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, வாடகை செலுத்த  கால அவகாசம் கேட்டனர். அதற்கு ஆணையாளர், வாடகை செலுத்தினால் மட்டுமே கடைகள் திறக்கப்படும். வாடகை செலுத்தாவிட்டால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று 2 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது. அதன்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து வியாபாரிகளில் சிலர், புதிய காய்கறி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கியதில் நீங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளீர்கள், அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என கூறி நகராட்சி ஆணையாளரிடம் வாக்குவாதம் செய்தனர்.

தகவலறிந்த போலீசார், அனைத்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகள், வாடகை செலுத்த 12ம் தேதி வரை அவகாசம் கேட்டனர். அதற்கு ஆணையாளர், அலுவலக ஊழியர்களுக்கு 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. எங்களுக்கு பிரச்னை அதிகமாக உள்ளது. இதனால் நகராட்சிகள் மண்டல இயக்குனர், வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். எங்களால் எதுவும் செய்ய முடியாது. பாதி வாடகையாவது செலுத்தினால் அதிகாரிகளிடம் பேசி அவகாசம் கேட்க முடியும். இல்லையென்றால் நீங்களே கலெக்டரிடமோ, அதிகாரிகளிடமோ பேசுங்கள் என தெரிவித்தார். இதையடுத்து வியாபாரிகள், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை தெரிவித்து, ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். நாளை(இன்று)க்குள் வாடகையை செலுத்தி விடுகிறோம் என்றனர். அதன்பேரில், கலெக்டர் ஆணையாளரை தொடர்பு கொண்டு கடையை திறந்து விடுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, மாலை 4 மணி அளவில் காய்கறி கடைகளை ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதனால் ஆரணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டியது 156 கடைகள், கணக்கில் காட்டியது 144...
நகராட்சி சார்பில் பொதுமக்கள் பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ், 2.50 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் 144 கடைகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கட்டியது 156 கடைகள். 144 கடைகளை கணக்கில் காண்பித்துவிட்டு, 12 கடைகளை யாருக்கும் தெரியாமல், அதிக பணம் வாங்கி கொண்டு வாடகைக்கு விட்டுள்ளனர். அதேபோல், ஏற்கனவே கடை வைத்துள்ள நபர்களுக்கு கடைகளை ஒதுக்காமல் அதிக பணம் கொடுத்த நபர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக  வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


Tags : municipality ,vegetable market stalls ,Arani ,Orange Municipality , Non-payment of rent in Orange Municipality `Sealed for Temporary Vegetable Market Shops
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை