×

மங்களூரு-கோவை இடையே தேஜஸ் ரயில்

* தெற்கு ரயில்வே திட்டம் * விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு


சென்னை: மங்களூரு-கோவை இடையே தேஜஸ் ரயில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருப்பதாகவும், ரயில்வே வாரியத்திடம் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் சொகுசு ரயில் கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் 23 பெட்டிகளும், 18 குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகளும், எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் எனப்படும் இரண்டு உயர் வகுப்பு பெட்டிகளும், மூன்று டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளும் உள்ளன. ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் சிறிய வீடியோ திரைகள், தானியங்கி டீ, காபி இயந்திரங்கள், ஜிபிஎஸ் வசதி, எல்இடி விளக்குகள், பெட்டியின் உட்புறமும், வெளிப்புறமும் தானியங்கி கதவுகள், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள் உள்ளன.


மேலும், செல்போன் சார்ஜர் வசதி, கழிவறை கண்ணாடிகளில் தொடு திறன் சுவிட்ச் கொண்ட எல்இடி விளக்கு உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங்கள் ரயிலில் இடம் பெற்றுள்ளன. உயர் வகுப்பு பெட்டியில் 56 பயணிகளும், இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தலா 78 பயணிகளும் பயணிக்கலாம். எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த சொகுசு ரயில் பிற்பகல் 12.30 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். அதேபோன்று மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அவ்வாறு இயக்கப்படும் ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். வியாழக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயிலில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றடையலாம். சென்னை -மதுரை இடையே ரயிலில் சேர் கார் பெட்டிகளுக்கான கட்டணம் ரூ.895 என்றும், முதல் வகுப்பு சொகுசுப் பெட்டிக்கு ரூ.1,940 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் தேஜஸ் ரயில்களை இயக்க ரயில்வே துறை ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் இருந்து சென்னை எழும்பூர்- மதுரை இடையே தேஜஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து கோயம்புத்தூருக்கு தேஜஸ் ரயில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும், அந்த தேஜஸ் ரயில் காலை 6 மணிக்கு மங்களூருவில் புறப்பட்டு பிற்பகல் 12.10 மணிக்கு கோவைக்கு வந்தடையும். அதேபோன்று மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு மங்களூரு சென்றடையும். இதுதொடர்பாக இந்த ஆண்டிற்கான அட்டவணை கமிட்டிக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளிக்கும்பட்சத்தில் தேஜஸ் ரயிலின் கட்டணம், இயக்கப்படும் நேரம் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Mangalore ,Coimbatore ,Tejas , Tejas train between Mangalore-Coimbatore
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்