புகார் மனு கொடுக்க சென்ற வாலிபருக்கு பளார் பெண் போலீஸ் ஏட்டு காவல் நிலையத்தில் அடாவடி

கோவை:  கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு  கொடுக்க சென்ற வாலிபரை பெண் போலீஸ் ஏட்டு பளார் என அறைந்த விவகாரம் பெரும்  பரபரப்பை உருவாக்கியுள்ளது. கோவை புறநகர் காவல் துறையின்  கட்டுப்பாட்டில் உள்ள பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்  போலீஸ் ஏட்டாக பணிபுரிந்தவர் கிருஷ்ணவேணி. இவர், புகார் மனு கொடுக்க வருவோரிடம் லஞ்சம்  கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் அடாவடி செய்வதாகவும், சட்டையை பிடித்து  இழுத்து அடிப்பதாகவும் புகார் வெளியானது. சமீபத்தில்கூட ஒரு வாலிபர்  சட்டையை பிடித்து பளார் என அறைவிட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.  

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில்  பாதிக்கப்பட்ட சிலர், கோவை புறநகர் எஸ்பி. சுஜித்குமாரிடம் புகார் மனு  அளித்துள்ளனர். அதன் விவரம்: ஏட்டு கிருஷ்ணவேணி பேரூர் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில்  பணிபுரிந்து வருகிறார்.  இவர், புகார்தாரர்கள் அனைவரிடமும் லஞ்சம் வாங்குகிறார். இவருக்கு பணம்  தரவில்லை என்றால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும்  எடுப்பதில்லை.   காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் என்ன செய்யவேண்டும் என்பதை இவரே  முடிவு  செய்கிறார். இரவு 7 மணிக்கு மேலாகத்தான் புகார் மனுவை விசாரிக்க   ஆரம்பிக்கிறார்.

இவரும், இக்காவல் நிலைய இன்ஸ்பெக்டரும்  கைகோர்த்துக்கொண்டு, லஞ்ச பணம் குவிக்கின்றனர். லஞ்சம் கொடுக்க மறுக்கும்   புகார்தாரரை, மிகவும் தரக்குறைவாக நடத்துகின்றனர். காவல் நிலையத்திற்கு  வரும்  வழக்கறிஞர்கள் அனைவரிடமும் சண்டை  போடுகிறார். புகார்தாரரை  கைநீட்டி அடிக்கும் அளவுக்கு அராஜம் செய்கிறார். ஏற்கனவே இவர் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வடவள்ளி  காவல் நிலையத்திற்கு பணி  மாறுதல் பெற்று, பணி மாறுதலில்  செல்லாமல் பேரூர் மகளிர் காவல்   நிலையத்திலேயே பணிபுரிந்து வருகிறார்.

யாராவது தட்டிக்கேட்டால்,  மேலதிகாரிகளுக்கு காசு கொடுத்து  அனைத்து காரியங்களும் சாதித்து விடுவேன். என்னை யாராலும் டிரான்ஸ்பர் செய்ய முடியாது என்கிறார். புகார்  மனு அளிக்க வரும் மக்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்ளும் இவர் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர். இடமாற்றம்: இந்த நிலையில் ஏட்டு கிருஷ்ணவேணி பேரூர் காவல் நிலையத்தில் இருந்து இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். அவரை தொண்டாமுத்தூர் காவல்  நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்துள்ளனர். 

Related Stories:

>