×

மதுரையில் 2022ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் :ராமாயண சுற்றுலா ரயில் சேவையை தொடக்கி வைத்த மத்திய இணையமைச்சர் அறிவிப்பு

மதுரை :மதுரையில் 2022ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்காக ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படும் என்று கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் சுற்றுசுவர் கட்டும் பணி 90% நிறைவடைந்துள்ளதாக கூறினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2020 செப்டம்பரில் தொடங்கும். இப்பணிகள் 2022 செப்டம்பரில் நிறைவு பெறும் என்றும் கட்டுமான பணிகளை 2022ல் முடிக்கும் முன்பாகவே மருத்துவக்கல்லூரியை 2021ம் ஆண்டு திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

நாட்டில் தற்போதுள்ள 80,000 மருத்துவப் பணியிடங்கள் 2022, 2023க்குள் ஒரு லட்சமாக உயரும் என்றார். மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட உள்ளது என்றும் இந்தியா முழுவதும் கூடுதலாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

 ராமாயண சிறப்பு ரயில் தொடங்கி வைப்பு

இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயக்கப்படும் ராமாயண சிறப்பு சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தை நேற்றிரவு வந்தடைந்தது. பின்னர் இங்கிருந்து புறப்பட்ட ரயிலை, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே, கொடியசைத்து துவக்கி வைத்தார். நெல்லையில் நேற்று புறப்பட்ட இந்த ரயில், மதுரை, திண்டுக்கல், காட்பாடி, ரேணிகுண்டா, குண்டக்கல், பெல்லாரி, நாசிக், மன்மாட், அலகாபாத், வாரணாசி, அயோத்தி, பைசாபாத் ஆகிய நகரங்கள் வழியாக சென்று மீண்டும் நெல்லையை மார்ச் 18ம் தேதி வந்தடையும்.நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், உணவு மற்றும் சுற்றுலா கழக பொது மேலாளர் ஜெகநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி வீராசுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Tags : Union Minister of State ,hospital ,AIIMS ,Madurai , Ramayana Special Train, Health Department, Internet Minister, Aswini Kumar Soubay, AIIMS, Madurai
× RELATED டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...