×

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் என்பிஆர் தகவல் சேகரிப்பை நிறுத்துக்.. பதிலளிப்பவர்களின் குடியுரிமை கேள்விக்குறி என மக்கள் அச்சம் : 190 பொருளாதார நிபுணர்கள் கூட்டறிக்கை

டெல்லி : என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை  தகவல் சேகரிப்பை நிறுத்த வேண்டும் என்று சமூக அறிவியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் வலியுறுத்தி உள்ளனர். சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சி ஆகியவற்றிற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
 
190 பொருளாதார நிபுணர்கள் கூட்டறிக்கை

இதனிடையே தேசிய மக்கள் தொகை தகவல் சேகரிப்பை நிறுத்த வலியுறுத்தி பொருளாதார நிபுணர்கள், சமூக அறிவியலாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஆஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், தி இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், ஆக்சிபோர்ட பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம் என உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் 190 பேர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

அறிக்கையின் விவரம்


அந்த அறிக்கையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக பதிலளிப்பவரின் குடியுரிமை சந்தேகத்திற்குரியது என்று விசாரணை நடத்துபவர்கள் தீர்மானிக்கும் ஆபத்து உள்ளது என்ற அச்சம் கணிசமான பிரிவினரிடையே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த அவநம்பிக்கை மற்றும் சந்தேகத்தை பரவலாக ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகளை மக்கள் தொகை தயாரிப்பு பணிகளுடன் நடத்துவதால் உண்மையான விவரங்களை சேகரிக்க முடியாத நிலை ஏற்படும் என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பயந்து பொது மக்கள் விவரங்கள் அளிக்க தயங்குவார்கள் என்பதால் அதன் அடிப்படையில் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்பது தெளிவு இல்லாமல் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகைப் பதிவை நடத்துவது மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தை மீறும் செயல் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்பு முற்றிலும் பாதுகாப்பானது விரிவானது மற்றும் வேறு எந்த பிற காரணிகளாலும் பாதிக்கப்படாதது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சிஏஏ மற்றும் டெல்லி வன்முறை குறித்த விமர்சனங்ளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், சர்வதேச அமைப்புகளும் வெளிநாட்டு தலைவர்களும் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

Tags : NPR ,scientists ,Census ,economists ,Modi , NPR, national census, census, sociologists, economists
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு