×

7 ஆண்டுகளில் இல்லாத அளவாக பிஎப் வட்டி 8.5 சதவீதமாக குறைப்பு: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டியை 0.15 சதவீதம் குறைத்து, 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார். பிஎப் நிறுவனம், தொழிலாளர்களின் பிஎப் பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை நிர்ணயித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 8.65 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டுக்கான வட்டியை நிர்ணயிக்க, பிஎப் வாரிய அறக்கட்டளை கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கங்க்வார் கூறுகையில், ‘‘நடப்பு 2019-20 நிதியாண்டுக்கான பிஎப் வட்டியை முடிவு செய்ய பிஎப் வாரிய அறக்கட்டளை கூட்டம் இன்று நடந்தது. இதில் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், கூடுதலாக 700 கோடி செலவாகும்’’ என்றார்.

பிஎப் நிதி பங்குச்சந்தை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. பங்குச்சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை இல்லாததால், எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. தொழிலாளர்களின் பணத்தில் சுமார் 18 லட்சம் கோடி இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத்தில் மேற்கொண்ட 4,500 கோடி அடங்கும். இந்த நிறுவனங்கள் இரண்டுமே நிதி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளவை. இதில், திவான் ஹவுசிங் நிறுவனம், திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ள முதல் வங்கி சாரா நிதி நிறுவனம். இந்த பணம் திரும்ப வருமா என்பது சந்தேகம்தான்.  பிஎப் நிறுவனம் தனது முதலீட்டு தொகையில் 85 சதவீதத்தை கடன் சந்தையிலும், 15 சதவீதத்தை பங்குகளில் இடிஎப் பண்டுகள் வாயிலாக முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதிப்படி, பங்குகளில் 74,324 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 14.74 சதவீத லாபம் கிடைத்துள்ளது.  எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் இல்லை.  

ஏற்கெனவே நிதி பற்றாக்குறையில் அரசு தவித்து வரும் நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டி, தற்போது உள்ள 8.65 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதம் குறைத்து 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என தகவல்கள் வெளியாகின. இதற்கேற்ப வட்டி விகிதம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இது 7 ஆண்டுகளில் இல்லாத குறைவாகும். இதற்கு முன்பு 2012-13 நிதியாண்டில் வட்டி 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பிறகு மீண்டும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது வட்டியை 8.55 சதவீதமாக நிர்ணயித்தால் கூட, கூடுதலாக 300 கோடி செலவாகும். இதற்கு மேல் உயர்த்தினால் அரசுக்கு நிதிப்பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வட்டி குறைப்பு தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை பிஎப் வட்டி விகிதம்
நிதியாண்டு    வட்டி
2012-13        8.5%
2013-14        8.75%
2014-15        8.75%
2015-16        8.8%
2016-17        8.65%
2017-18        8.55%
2018-19        8.65%



Tags : Union Minister Reduces PF ,Union Minister , PF interest, Union minister, current fiscal year
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...