ஆஸிக்கு பதிலடி ஒருநாள் தொடரை வென்ற தெ.ஆப்ரிக்கா

புளேயம்ஃபான்டீன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. தென் ஆப்ரிக்கா-ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஒருநாள் போட்டி புளேயம்ஃபான்டீன் நகரில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் களம் கண்டது. அந்த அணியின்  டேவிட் வார்னர் 35,  கேப்டன் ஆரோன் பிஞ்ச் 69ரன் என அருமையான தொடக்கம் தந்தனர். அதேபோல் ஆர்சி ஷார்ட் 69, மிட்செல் மார்ஷ் 36, அலெக்ஸ் கேரி 36ரன் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர். ஸ்டீவன் ஸ்மித் உட்பட மற்றவர்கள் மிக குறைந்த ரன்னில் வெளியேற 50 ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 271ரன் எடுத்தது. தெ.ஆப்ரிக்காவின் லுங்கி என்ஜிடி அசத்தலாக பந்து வீசி 6 விக்கெட்களை அள்ள, ஆன்ரிச் 2, பெளுக்வாயோ, தபரயஸ் ஷம்சி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து 272ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட தெ.ஆப்ரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரிலேயே கேப்டன் டீ காக் டக் அவுட்டாகி வெளியேறினார்

.

ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெனேமென் மாலன் பொறுப்பாக விளையாடினார். ஒருப்பக்கம் ஜே.டி.ஸ்மூட்ஸ் 41, ஹெயின்ரிச் கிளாசன் 51ரன்  விளாச ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கடைசியாக இணை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் மாலன் 129*, டேவிட் மில்லர் 37* ரன்னுடன் களத்தில் இருக்க தெ.ஆப்ரிக்கா 48.3ஓவரிலேயே 4 விக்கெட்களை இழந்து 274ரன் எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸியின் ஆடம் ஸம்பா 2, மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம்  டி20 தொடரை 2-1  என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸிக்கு தெ.ஆப்ரிக்கா பதிலடி அளித்துள்ளது. கடைசி ஒருநாள் போட்டி நாளை பாட்செபஸ்ட்ரூமில் நடக்க உள்ளது.

Related Stories:

>