×

எத்தியோப்பியாவில் இருந்து பார்சல்களில் வந்த 50 லட்சம் போதை பொருட்கள் சிக்கியது

சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில் ‘‘வெளிநாடுகளுக்கான தபால் நிலையம்’’ உள்ளது. இங்கு வெளி நாட்டில் இருந்து வரும் பார்சல் மற்றும் இங்கிருந்து வெளி நாடுகளுக்கு செல்லும் பார்சல்களை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை வெளி நாட்டில் இருந்து வந்த பார்சல்களை சுங்க அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது  எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடீஸ்அபாபாவில் இருந்து 8 பார்சல்கள் ஒரே முகவரிக்கு சென்னைக்கு வந்தது. அந்த 8 பார்சல்களின் மேல் பரிசு பொருட்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்க அதிகாரிகளுக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது. அந்த பார்சல் மீது உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது, அந்த எண் உபயோகத்தில்  இல்லை என தெரியவந்தது. அதன் பின்னர், பார்சலில் குறிப்பிடப்பட்டு சென்னை முகவரிக்கு சுங்க அதிகாரிகள் ஒரு குழுவாக சென்று விசாரித்தனர். அப்போது, அது போலியான முகவரி என தெரியவந்தது.

இதனால், அதிகாரிகள் அந்த 8 பார்சல்களையும்  திறந்து பார்த்தனர். 8 பார்சல்களிலும் ‘‘கேட்’’ என்ற போதை இலைகள் மற்றும் போதை பவுடர் இருந்தது. இதன் மொத்தம் எடை 11  கிலோ.  இதன் மதிப்பு 50 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த போதை பொருட்களை கைப்பற்றினர்.  இந்த போதை பொருள் ஏமன் மற்றும் எத்தியோப்பியாவில் பயிரிடப்படுகின்றது. இந்த இலைகளில் இருந்து அபிட்டமின், கேட்மீன் என்கிற போதை பொருட்களை தயார் செய்கின்றனர். இந்த போதை பொருளை ஆப்பிரிக்க நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில்  உபயோகப்படுத்துகின்றனர்.  

சென்னையில் ஆப்பிரிக்க நாட்டு இளைஞர்கள் பெருமளவில் வசிப்பதால், யாரோ இதனை ஒரு முகவரிக்கு அனுப்பியது தெரியவந்தது. இதை அனுப்பியவர் யார், இதை பெறக்கூடியவர் யார் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு இதே மாதிரி கென்யா நாட்டில் இருந்து போதை இலை பொருட்கள் சென்னைக்கு வந்தது. அதனை சுங்க அதிகாரிகள் அப்போது பரிசோதித்து கண்டு பிடித்தனர். ஆனால் அப்போதும் குற்றவாளிகள் யாரும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Ethiopia ,parcels , Ethiopia, Parcels, Drugs
× RELATED வேதாரண்யம் அருகே கடற்கரையில் 26 கிலோ...