×

தென் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த வனப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி: என்ஐஏ விசாரணையில் காஜா மொய்தீன் தகவல்

சென்னை:  திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமாரை, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த காஜா மொய்தீனின் கூட்டாளிகளான சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகியோர் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். அதன் பிறகு மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். சென்னை மாநகர காவல் துறை இந்த மூன்று பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து புகைப்படம் வெளியிட்டது. இதற்கிடையே டெல்லி அருகே வசிராபாதில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகியோரை ஜனவரி மாதம் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலியான பெயர்களில் சிம்கார்டுகள் வாங்கி கொடுத்ததாக தமிழக க்யூ பிரிவு போலீசார் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன், சென்னையை சேர்ந்த ராஜேஷ், சேலத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், லியாகத்அலி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி முகவரி மூலம் வாங்கிய சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி பெங்களூரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இம்ரான்கான், முகமது ஹனீப் கான், முகமது ஜெயித் ஆகியோரை தமிழக க்யூ பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 80 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது ஐபிசி 465,468,471, 120 பி, மற்றும் ஊபா தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து இந்த வழக்கு தமிழக க்யூ பிரிவில் இருந்து தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)வுக்கு மாற்றப்பட்டது. பிறகு காஜா மொய்தீன் உட்பட 10 பேரை கடந்த 27ம் தேதி முதல் 3ம் தேதி வரை 6 நாள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகளான காஜா மொய்தீன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு போலி ஆவணம் மூலம் பச்சையப்பன், ராஜேஷ், அன்பரசன், அப்துல் ரகுமான் ஆகியோர் சிம்கார்டுகள் வாங்கி கொடுத்துள்ளனர். அதற்கான அனைத்து உதவிகளையும் லியாகத் அலி செய்து கொடுத்துள்ளார்.

பிறகு தீவிரவாதி காஜா மொய்தீன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைபடி இந்தியாவில் புதிய தீவிரவாத இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். மூளை சலவை செய்து 10க்கும் மேற்பட்ட வாலிபர்களை அந்த இயக்கத்தில் சேர்த்துள்ளார். அவர்களுக்கு மும்பை தாக்குதல் போல் பெரிய அளவில் தென் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் விதமாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சியை காஜா மொய்தீன் அளித்துள்ளார். இதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை பெங்களூரை சேர்ந்த இம்ரான் கான், முகமது சையது, எஜாஸ் பாஷா, உசேன் செரீப் ஆகியோர் சப்ளை செய்துள்ளனர்.

இந்த பயிற்சி முடிந்த பிறகு அனைவரும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருந்த காஜா மொய்தீன் அனைத்தும் செய்து வந்துள்ளார். ‘டார்க் வெப்’ என்ற சட்ட விரோத இணையதளத்தை பயன்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் காஜா மொய்தீன் பேசி வந்ததும் 6 நாள் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைதொடர்ந்து இந்த வழக்கில் தீவிரவாதி காஜா மொய்தீனுக்கு உதவிய மேலும் பலரை என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags : terrorists ,attacks ,South India ,jungle ,Ghazia Moideen ,NIA , South India, Large, Assault, Forestry, Terrorist, Armed Training, NIA Investigation, Gaza Moideen
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...