×

வன்முறையில் தூண்டும் வகையில் பேச்சு பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்

சென்னை: வன்முறையில் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக பெண்கள் தொடர் இருப்பு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் பதிவிட்டுள்ள டிவிட்டரில் ‘அமைதியான முறையில் போராடி வரும் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லவில்லை என்றால் வண்ணாரப்பேட்டையிலும், தமிழகத்திலும் டெல்லியில் நடந்தது போன்று வன்முறை நடைபெறும்’ என்று பகிரங்கமாக கூறி வருகிறார். அவரது இந்த பேச்சு டெல்லி தாக்குதலுக்கு பாஜதான் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறது. பெண் போராளிகள் மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசிவரும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மீது வன்முறையை ஏவி விடும் வகையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் சமீபத்தில் பேசி இருக்கிறார். ‘கிறிஸ்தவ மதத் தலைவர்கள் அனைவரையும் ஓட ஓட விரட்டியடிக்கும் காலம் விரைவில் வரும்’ என்று கூறியுள்ளார். பாஜ மூத்த தலைவரின் இந்த பேச்சு தமிழகத்தில் மிக கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். எனவே கிறிஸ்தவ மத தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : H. Raja ,Pon.Radhakrishnan ,office ,DGP ,DGP Office , Violence, Pon.Radhakrishnan, H. Raja, DGP Office, Complaint
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக...