×

இயற்கையை பாதுகாக்காவிட்டால் கொரோனா போன்ற பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடலாம்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எச்சரிக்கை

மதுரை: தேனி மாவட்டம், உத்தமபாளையம் கருங்கட்டான்குளம், நஞ்சை பட்டதார் விவசாயிகள் நலச்சங்கத்தலைவர் விஜயராஜன் மற்றும் கூடலூர் கலைமன்னன், கம்பம் நாராயணன், உத்தமபாளையம் சுல்தான் செய்யது இப்ராகீம் உள்ளிட்ட 10 விவசாயிகள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெரியாறு - வைகை பாசனத்திற்காக பல இடங்களில் கால்வாயும், குழாயும் உள்ளது. இப்பகுதிகளில் சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டு நடக்கிறது. பல இடங்களில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால், விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. ஒருபோக பாசனம் செய்வதே பெரும் சிரமமாக உள்ளது.

எனவே, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களை ெகாண்டு ஒரு கண்காணிப்பு குழு அமைக்கவும், இக்குழுவினர் பெரியாறு மற்றும் வைகை பாசனத்தின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்குரிய பங்கு தண்ணீரின் வரத்து, திறப்பு விகித அளவு, குடிநீர் தேவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும்,  பெரியாற்றில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் முதல் தேதியில் குடிநீர் தேவை தவிர்த்து வேறு எந்த காரணத்திற்காகவும் தண்ணீர் திறக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, ‘பெரியாறு - வைகை பாசனப்பகுதியில் தற்போதே குடிநீர் பிரச்னை துவங்கிவிட்டது. தண்ணீர் திருட்டு தொடர்ந்தால் தென்மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘கொரோனா பாதிப்பு நம் வாசற்படி வரை வந்துள்ளது. இயற்கையை பாதுகாக்காவிட்டால் நாமும் கொரோனா போல பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்’’ என்றனர். பின்னர், மனுவிற்கு தேனி கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்டோர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 24க்கு தள்ளிவைத்தனர்.

Tags : Corona ,branch judges ,Icourt ,Icort , Nature, Corona, Icort Branch Judges, Warning
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு