×

வேலை செய்யாதவர்களுக்கு பதவி தர முடியாது காங்., புதிய நிர்வாகிகள் பட்டியலை இறுதி செய்ய கே.எஸ்.அழகிரி தீவிரம்: கோஷ்டி தலைவர்கள் தலையீட்டால் இழுபறி நீடிப்பு

சென்னை: புதிய நிர்வாகிகள் பட்டியலை இறுதி செய்வதற்காக கே.எஸ்.அழகிரி தீவிரம் காட்டிவருகிறார். ஆனால் கோஷ்டி தலைவர்கள் தலையீட்டால் பட்டியலை வெளியிடுவதில் இழுபறி நீடித்து வருகிறது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக புதிய நிர்வாகிகளை நியமிக்க கே.எஸ்.அழகிரி முடிவு செய்தார். காலியாக உள்ள மாவட்ட தலைவர்கள் பதவிகள் மற்றும் கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருப்பவர்களை தூக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். இதனால் அவர்களை விடுவித்து விறுவிறுப்பாக செயல்படக்கூடிய கட்சியினருக்கு பதவிகள் வழங்க முடிவு செய்துள்ளார். அதற்கான பட்டியலை தயாரித்து டெல்லி மேலிடத்துக்கு கொண்டு சென்றார்.

மேலிடமும் கே.எஸ்.அழகிரி கொடுக்கக்கூடிய பட்டியலுக்கு ஒப்புதல் வழங்க தயாராகவே இருந்தது. ஆனால் அவர் கொண்டு சென்ற பட்டியலுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தங்கள் ஆதரவாளர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதால் மேலிடத்தில் பிரச்னை எழுந்துள்ளது. அவர்கள் தரும் பெயர்களையும் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் என்று மேலிட தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், கே.எஸ்.அழகிரியை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து மூத்த தலைவர்களிடம் பட்டியல் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் சிபாரிசு செய்யும் நபர்களில் சிலர் தற்போது பதவிகளில் உள்ளனர். ஆனால் அவர்கள் கட்சி பணிகளை சரிவர செய்யாமல் பெயருக்கு மட்டும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு திரும்பவும் பதவி வழங்க முடியாது என்று கே.எஸ். அழகிரி மேலிடத்தில் உறுதியாக தெரிவித்துள்ளார். வேலை செய்யாத எந்த நபர்களாக இருந்தாலும் யாருடைய ஆதரவாளராக இருந்தாலும் அவர்களுக்கு புதிதாக பதவி வழங்க முடியாது என்பதில் அவர் உறுதியாக உள்ளதால் புதிய பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தமிழக மேலிட பொறுப்பாளர்களாக உள்ள முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத் ஆகியோர் சிபாரிசு மூலம் சிலர் முக்கிய பதவிகளை பிடிக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் புதிதாக ‘டெல்லி’ கோஷ்டி ஒன்று உருவாகும் நிலை இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.  இப்படி கோஷ்டி மேல் கோஷ்டிகள் இருப்பதால் புதிய நிர்வாகிகள் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஆனாலும் கே.எஸ்.அழகிரி நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் தீவிர காட்டி வருவதால் கடந்த வாரம் 3 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். எனினும்ல, கோஷ்டி தலைவர்களின் தலையீட்டால் பட்டியலை இறுதி செய்வது இழுத்தடித்து வருவது தமிழக காங்கிரசார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : executives ,Congress ,KSAlagiri ,New Executives , Congress, New Executives, KSAlagiri, Intensity
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது