×

இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் 27ம் தேதி ஸ்டிரைக்: தொடர்ச்சியாக 3 நாட்கள் வங்கி சேவை பாதிக்கும்

சென்னை: வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வருகிற 27ம் தேதி ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக், சனி, ஞாயிறு என்று வங்கிகள் தொடர்ச்சியாக 3 நாட்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: மத்திய பாஜக அரசு தொடர்ந்து வங்கி துறையில் சீர்திருத்த கொள்கைகளை அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஒருபுறத்தில் அரசு வங்கிகளில், அரசின் பங்கை குறைக்கும் வகையில் தனியார் மூலதனத்தை அதிகரிக்க அறிவிப்புகள் செய்து வருகிறது.

மறுபுறத்தில், உலக வங்கிகளுடன் போட்டிக்கு தயார் செய்யும் வகையில் பொதுத்துறை வங்கிகளை பெரிய வங்கிகளாக மாற்றுகிறோம் என்ற விவாதத்தை முன்வைத்து, சில ஆண்டுகளாக வங்கிகள் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக 6 துணை வங்கிகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியோடு இணைத்தது. சென்ற ஆண்டு விஜயா வங்கி, தேனா வங்கி என்ற 2 அரசு வங்கிகளை பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைத்தது. இப்போது ஏப்ரல் 1ம் தேதி முதல் 10 வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றுவதாக நேற்றைக்கு (நேற்றைய முன்தினம்) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்துள்ளது. ஏற்கனவே, இணைக்கப்பட்ட வங்கிகளின் அனுபவம் மற்றும் கிளைகள் மூடப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை குறைவு ஏற்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வராக்கடன் வசூலிப்பதில் கவனம் குறைந்து, சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக லாபம் கணிசமாக குறைந்து வருகிறது. ஒருபுறத்தில் அனைவருக்கும் வங்கி சேவை என்ற திட்டத்தை அறிவித்திருக்கும் மத்திய அரசு, தற்போது வங்கிகள் மூடும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதை எதிர்த்து வருகிற 27ம் தேதி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் 3.50 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 30,000 ஆயிரம் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் வங்கிகள் இயங்கினாலும், போராட்டத்தால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக். 28ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாள். மறுநாள் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு லீவு என்று வருகிறது. இதனால், வங்கி சேவை 3 நாட்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Tags : Strike ,Bank ,bank employees , Merger action, bank employees, on 27th, Strike
× RELATED வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி கால்...