×

தேனி மாவட்டத்தில் கந்துவட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டியால் மக்கள் அவதி: எஸ்பி கவனிப்பாரா?

தேனி: தேனி மாவட்ட பொதுமக்கள் கந்துவட்டி, மீட்டர் வட்டி, நாள்வட்டி, வாரவட்டிக்கு பணம் வாங்கி, கட்ட முடியாமல் வட்டிக்கு கொடுத்தவர்களிடம் சிக்கி பரிதவித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கூடலுார், கம்பம், சின்னமனுார், தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதிகளில் அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. குறிப்பாக இவர்கள் கந்துவட்டி, மீட்டர் வட்டி, நாள் வட்டி, வாரவட்டி, தினவட்டி என சிறு வியாபாரிகளுக்கும், அவசர பணம் தேவைப்படும் ஏழைகளுக்கும் கடன் வழங்கி அதிகம் வட்டி வாங்கி மக்களை கொடுமைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

இவர்களிடம் பணம் வாங்கியவர்கள் தப்ப வழியில்லாமல் பரிதவித்து வருகின்றனர். ஒருமுறை கடன் வாங்கி விட்டால் போதும், கடன்பட்டவர்களின் சொத்துக்களை முழுமையாக விற்றால் கூட வட்டியை கூட கட்ட முடியாது. அந்த அளவு வட்டி வசூலிப்பதோடு, கூட்டு வட்டியும் போட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தால், போலீசாரும் கடன் கொடுத்தவர்களுக்கே சப்போர்ட் செய்கின்றனர். இவ்வளவு வட்டி கட்ட வேண்டும் என தெரிந்து தானே கடன் வாங்கினீர்கள், உடனே கட்டுங்கள் எனக்கூறி வட்டிக்கு வாங்கியவர்களை போலீசாரும் மிரட்டுகின்றனர்.

இப்படி கடன் சுமையில் சிக்கி தவிப்பவர்கள் தப்பிக்க வழியில்லாமல், தங்கள் சொத்துக்களை இழந்து வருகின்றனர். போலீஸ் நி்ரவாகம் சில மாதங்கள் முன்பு வரை வட்டிக்கு கொடுத்தவர்களை பற்றி புகார் செய்தால் உடனே நடவடிக்கைகளை எடுத்து அவர்களை காப்பாற்றினர். தற்போதும் மாவட்ட எஸ்.பி இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து மக்களை வதைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

Tags : Theni ,kanduvatti ,avadi , Theni, kanduvatti, meter interest, run interest, people avadi
× RELATED நிதி நிறுவனம் ₹6 கோடி மோசடி: தேனி குற்றப்பிரிவில் புகார்