×

கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசும் திருத்தங்கல் கண்மாய்

சிவகாசி: திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் செங்குளம் கண்மாய் உள்ளது. திருத்தங்கல்-செங்கமலநாச்சியார்புரம் சாலையில் உள்ள இந்த கண்மாயில்  மழைநீர் தேக்கி வைக்கப்படும் பட்சத்தில் திருத்தங்கல் நகராட்சியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த  கண்மாய் போதிய பராமரிப்பின்றி காணப்படுவதால் மழை காலங்களில் போதிய அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் கழிவுநீர் கலப்பதால்  சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் தேங்கி நிற்கும் இந்த கண்மாய் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணும் பொறுப்பை நகராட்சி தட்டி கழிப்பதால் மக்களை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் நிறைந்த இந்த கண்மாயில் ஐந்து வார்டுகளின் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் இந்திராநகர், பாண்டியன் நகர் உட்பட சுற்றி உள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. கழிவுநீர் கலப்பதால் கண்மாய் நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. கண்மாயை சுற்றி வசிக்கும் மக்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். கண்மாய் அருகே உள்ள முனியசாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். மேலும் கண்மாய் நீர்வரத்து கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

இதனால் நீர்வரத்தின்றி கண்மாய் மண் மேடாகி கிடக்கிறது. கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் அதனை சுற்றியுள்ள விவசாய கிணறுகளின் நீர் உவர்ப்பாக மாறிவிட்டது. கண்மாயில் நீண்ட மாதக்கணக்கில் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்வோர், இப்பகுதி வீடுகளில் குடியிருப்போர் பெரும் அவதிப்படுகின்றனர். கண்மாயை தூர்வாரி கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Tags : Sewer, stink, correction eye
× RELATED ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு...