×

நத்தம் பகுதியில் வறட்சியால் மாற்று தொழிலில் இறங்கிய விவசாயிகள்

நத்தம்: நத்தம் பகுதிகளில் வறட்சி காரணமாக விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் உரித்த தேங்காய் மட்டைகளை நறுக்கி, அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இப்பகுதிகளில் சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருவதால், ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து அவற்றின் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால், நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு உரித்த தேங்காய் மட்டைகளை சிறுதுண்டுகளாக்கி, அவற்றை காய வைத்து கொடுக்கும் பணியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஆனந்தி என்ற விவசாயி கூறுகையில், ‘‘இப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. தற்போது வறட்சி காரணமாக வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு மாடுகள் விளைபொருட்களை அழித்து விடுகின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு, விவசாயத்தில் ஆர்வம் குறைந்து வருகிறது.

இருப்பினும் உணவு, பொருளாதார தேவைகளுக்காக பல்வேறு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அலங்கார பொருட்கள் செய்யும் நிறுவனத்திற்கு தேங்காய் மட்டைகளை நறுக்கி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நறுக்கி கொடுக்கும் தேங்காய் மட்டைகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.50 வரை கூலியாக தருகின்றனர். ஒருநாளைக்கு சராசரியாக 50 கிலோ வரை ஒருநபர் நறுக்கலாம். மழை குறைந்ததால் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.

Tags : area ,drought ,Natham , Damn, drought, farmers
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா