×

புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழா; 1500 கிடாக்களை பலி கொடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்: ரத்தத்தை குடித்து மருளாளி அருள்வாக்கு

திருச்சி: திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று குட்டிக்குடி விழா நடந்தது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய 1500 ஆடுகளின் ரத்தத்தை குடித்து மருளாளி அருள்வாக்கு கூறினார். திருச்சி புத்தூரில் பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு மாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் (2ம் தேதி) மறுகாப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் இரவு காளியவிட்டம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று ஓலைப்பிடாரி அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடி நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாக புத்தூர் மந்தையில் நடந்தது. ஓலைசப்பரத்தில் அம்மன் புத்தூர் மந்தைக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து குட்டிகுடி துவங்கியது. முதல் மரியாதையாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் ஆட்டுக்கிடா வழங்கப்பட்டது. கிடா கழுத்தை கடித்து ரத்தத்தை மருளாளி சிவக்குமார் குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதில் 1500க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்களை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குட்டிக்குடி திருவிழாவையொட்டி புத்தூர் பகுதி முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக திரண்டிருந்தனர். நாளை(6ம் தேதி) மஞ்சள் நீராட்டும், 7ம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags : Kuttikkudi Festival of Buddha Group ,Pilgrims ,kiddos ,Kuttikkudi Festival ,Buddha Group , Buddhoor Group, Amman Temple, Kuttikkudi Festival
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால்...