×

பணியில் இறக்கும் காவலர்களின் குடும்பத்துக்கு உதவும் தமிழக போலீசாரின் வாட்ஸ்அப் குரூப்: இதுவரை 14 பேருக்கு லட்சக்கணக்கில் நிதி

திருச்சி: பணியில் இருக்கும் போது இறக்கும் போலீசாரின் குடும்பத்துக்கு உதவுவதற்காக 1999 பேட்ஜ் போலீசார் வாட்ஸ்அப் குரூப் துவக்கி உள்ளனர். இந்த குழுவில் உள்ள போலீசார் இதுவரை 14 பேருக்கு லட்சக்கணக்கில் நிதியுதவி அளித்துள்ளனர். தமிழக காவல் துறையில் தற்போது சுமார் 1.50 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பணியில் சேருவோருக்கு, பணிக்காலத்தை கருத்தில்கொண்டு, பதவி உயர்வு வழங்கப்படும். இந்தநிலையில் 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்த சுமார் 1,200 போலீசார் இணைந்து ஒரு வாட்ஸ்அப் குரூப் தொடங்கி உள்ளனர். உதவும் உறவு என்று அந்த குரூப்புக்கு பெயரிடப்பட்டுள்ளது.

பணியின் போது இறக்கும் 1999 பேட்ஜ் போலீசாரின் குடும்பத்துக்கு உதவுவதற்காகவே இந்த குரூப் தொடங்கப்பட்டுள்ளது. 1999ல் பணியில் சேர்ந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்ற போலீஸ்காரர் கடந்த பிப்ரவரி 1ம் தேதி இறந்தார். இவரது குடும்பத்துக்கு உதவும் உறவு வாட்ஸ் அப் குரூப் சார்பில் ரூ.9 லட்சத்து 12 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்த வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள போலீஸ்காரர்கள் சிலர் கூறுகையில், பணியில் இருக்கும் போது இறக்கும் காவலர்களின் குடும்பம் மிகுந்த பாதிப்பை சந்திக்கும்.

அரசாங்கம் நிவாரண நிதி வழங்கினாலும் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் இருந்தால், திருமண வயதில் பெண்கள் இருந்தால் சமாளிப்பது கடினம். எனவே பணியில் இருக்கும் போது இறக்கும் 1999ல் பணியில் சேர்ந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு மட்டும் உதவுவதற்காக இந்த குரூப் துவங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 8 போலீசாரின் குடும்பத்துக்கு லட்சக்கணக்கில் நிதியுதவி செய்துள்ளோம். குரூப்பில் உள்ள அனைத்து போலீசாரும் வழங்கும் சொந்த நிதியை தான் இவ்வாறு வழங்கி வருகிறோம். இதற்காக வேறு யாரிடமும் வசூல் செய்வதில்லை. வாட்ஸ் அப் குரூப் சார்பில் ஒரு வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

யாராவது இறந்து விட்டால் வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு குரூப்பில் இருப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப நிதியை வங்கி கணக்குக்கு அனுப்புவார்கள். இந்த வாட்ஸ்அப் குரூப்பில் 27 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் இடம் பிடித்துள்ளனர் என்றனர். தமிழகத்தில் 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் வாட்ஸ்அப் குரூப் துவங்கி, இறக்கும் போலீசாரின் குடும்பத்துக்கு உதவி வருவது மற்ற காவல்துறையினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags : WhatsApp Group ,Tamil Police Helping Family of Dying Police WhatsApp Group ,Tamil Police Helping the Family Dying Police , Work, Tamil Police, WhatsApp Group, Finance
× RELATED சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு...