×

மக்களவையில் காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் சஸ்பெண்ட்: சபாநாயகர் பொறுப்பில் இருந்த ரமாதேவியின் கைகளிலிருந்த காகிதங்களை கிழித்து எறிந்ததால் நடவடிக்கை!

டெல்லி: சபாநாயகரின் பொறுப்பில் இருந்த ரமாதேவியின் கைகளிலிருந்த காகிதங்களை 7 காங்கிரஸ் எம்.பிக்கள் கிழித்து எறிந்ததால் அவர்களை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்தும், 7 பேரை சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு தொடங்கிய நாள் முதலே தொடர்ந்து, அவையில் கூச்சல், குழப்பம் அமளி என்பது நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக டெல்லி விவகாரத்தை முன்வைத்து அவையில் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று சபாநாயகர் ஓம். பிர்லா மிக கடுமையான எச்சரிக்கை ஒன்றினை கொடுத்திருந்தார். நீங்கள் உங்கள் இருக்கையில் இருந்து எழுந்திரிக்க கூடாது. இங்கும், அங்கும் செல்லக்கூடாது, அப்படி யாரேனும் சென்றால் நிச்சயமாக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் இன்று மக்களவை கூடிய போது எதிர்க்கட்சியின் அமளி காரணமாக மக்களவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 2 மணியளவில் மக்களவை மீண்டும் கூடிய போது, சபாநாயகர் பொறுப்பில் ரமாதேவி என்பவர் இருந்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதோடு விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாக்கூர், கவுரவ் கோகாய்  உள்ளிட்ட எம்.பிக்கள் அவரின் கையில் இருந்த காகிதத்தை பிடிங்கியதாக ராமதேவி புகார் அளித்திருந்தார். அதனை அந்த குழு பரிசீலித்தது. அதன் பிறகு அப்புகாரின் அடிப்படையில் இன்று மீண்டும் அவை கூடியவுடன் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு. பிரகலா ஜோஷி இவர்கள் 7 பேரையும் சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பதாக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இந்த 7 எம்.பிக்களும் நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடையும் வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்திருக்கிறார். மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், பிரதாபன், டீன் குரியகோஷ், பென்னி பெஹானம், ராஜ்மோகன் உன்னிதான் மற்றும் குர்ஜீத் சிங் உள்ளிட்ட 7 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடையும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.


Tags : Congress ,MPs ,Lok Sabha , Lok Sabha, Congress MP, Suspend, Ramadevi, Paper, Action!
× RELATED விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்...