×

நமஸ்தே டிரம்ப்...ஹவ்டி மோடி...யாருக்கு இடையே நல்லுறவு?

நன்றி குங்குமம்

இந்திய பாராளுமன்ற தேர்தலில் வென்று, இரண்டாவது முறை பிரதமரானதும் செப்டம்பர் மாதம் மோடி அமெரிக்கா சென்றார். அங்கே ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள், குறிப்பாக குஜராத்திகள், ‘ஹவ்டி மோடி’ என்ற பெயரில் பெரியதொரு விழா எடுத்தனர். குஜராத்தியான பிரதமர் அமெரிக்கா செல்லும்போது குஜராத்தி அமெரிக்கர்கள் விழா எடுப்பதில் அதிசயமில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றார். டிரம்ப்பை வானளாவப் புகழ்ந்த மோடி தன் தேர்தல் கோஷமான ‘ஆப் கி பார் மோடி சர்க்கார்’ என்ற முழக்கத்தை டிரம்ப்பிற்கு அளித்து ‘ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்’ என்று முழங்கினார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான காலம் நெருங்கிய நிலையில், டிரம்ப்பிற்காக பிரசாரத்தை தொடங்கி வைத்தார். ஓர் இந்திய பிரதமராக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரை ஆதரிக்க மோடிக்கு உரிமை கிடையாது.

அந்த நிகழ்ச்சியை அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்தாலும், அமெரிக்க அதிபர் வந்ததால் ஏதோ அமெரிக்க அரசே செய்தது போல ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. அதற்கு பதில் மரியாதையாக ‘நமஸ்தே மோடி’ என்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை குஜராத் மாநில தலைநகரில் நிகழ்த்த தீர்மானித்தார் மோடி. ஹூஸ்டன் நிகழ்ச்சியில் ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்டால், இங்கே ஒரு லட்சம் பேர் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால் இந்திய நிகழ்ச்சியை இந்திய அரசே, அரசு செலவில் ஏற்பாடு செய்தது என்பதுதான் மொத்தத்தில் தன்னையும் டிரம்ப்பையும் இணைத்து இரண்டு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டார் மோடி. டிரம்ப் இந்தியா வருவதை நியாயப்படுத்த வர்த்தகப் பேச்சுவார்த்தை, இராணுவ தளவாட விற்பனை என்றெல்லாம் சொல்வார்கள். இந்த தளவாடத்தை விற்க அமெரிக்க அதிபர் நேரில் வரவேண்டிய தேவையில்லை என்பது வெளிப்படை. அதிலும் எந்த ஒரு சுற்றுப்பயணத்தின் பகுதியாகவும் வராமல், இந்தியாவிற்கு மட்டும் தனிப்பட்ட பயணமாக வந்து செல்லுமளவு இந்தப் பயணத்திற்கு எந்த ராஜரீக அர்த்தத்தையும் கற்பிக்க இயலாது.

பிறகு ஏன் இந்தப் பயணம், ஆடம்பரம் என்பதே கேள்வி.அமெரிக்க நலனா? டிரம்ப்பின் நலனா?  அமெரிக்கா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கிடையே சமதையான உறவு கிடையாது என்பது வெளிப்படையானது. பொருளாதாரத்தில் இந்தியாவை விட அமெரிக்கா ஏழு மடங்கு பெரியது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 21 டிரில்லியன். இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 3 டிரில்லியன். ஐந்து டிரில்லியனை எட்டிப் பிடிப்பதை ஒரு கனவாகக் கூறி வருகிறது இந்தியா. அது இப்போதைக்கு எட்டாக்கனி என்றே இப்போதைய பொருளாதார மந்தநிலையை அல்லது தேக்கத்தை காணும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒப்பீட்டளவில் சீனாவின் பொருளாதாரம் 14 டிரில்லியன் என்ற அளவில் இருக்கிறது. இந்தியாவை விட நான்கு மடங்கு பெரியது. இது தவிர உலக அளவில் இராணுவ பலத்திலும் முன்னணியில் இருப்பது அமெரிக்கா. பனிப்போர் காலத்தில் ரஷியா, அதனுடன் அணிசேர்ந்த நாடுகள் அமெரிக்காவுக்கு இராணுவ எதிர் சக்திகளாக இருந்தன. அது இரு துருவ உலகு என அறியப்பட்டது.

1991ம் ஆண்டு சோவியத் ரஷியா உடைந்து சிதறியதும், ரஷியா தனி நாடாகியதும், அங்கே சோஷலிஸ பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததும் ஒற்றைத் துருவ உலகைத் தோற்றுவித்தன. சீனா முக்கியமான சக்தியாக வளர்ந்தாலும் அது அமெரிக்காவுடன் மிக நெருக்கமான பொருளாதார உறவில், போட்டியில் இருப்பதால் அரசியல் ரீதியாக அமெரிக்காவிற்கு எதிராக உலக அரசியலில் செயல்படுவதில்லை. வட கொரியா, ஈரான் போன்ற நாடுகள் முரண்டு பிடித்தாலும் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையில்தான் உள்ளன. இந்த நிலையில் இந்திய பிரதமரை அமெரிக்க வாழ் இந்தியர்கள் வரவேற்கும் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்வதால் அமெரிக்க நலனுக்கு பெரிய லாபம் எதுவும் கிடையாது என்பது வெளிப்படை. இரண்டு நாடுகளுக்கான உறவில் அமெரிக்காவின் கைதான் மேலோங்கியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான, இரண்டு யுத்தங்களை இந்தியாவுடன் நிகழ்த்தியுள்ள பகையுறவு உள்ள நாடான பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு மிகவும் விசுவாசமான நாடு. எனவே இந்தியாதான் அமெரிக்காவை மகிழ்விக்க வேண்டும்; பிறகு ஏன் டிரம்ப் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்? காரணம், அமெரிக்க வாழ் இந்தியர்கள் நாற்பது லட்சம் பேர் இருக்கிறார்கள். அமெரிக்க மக்கள் தொகையில் 1.3 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் அல்லது சமீபத்தில் குடியேறியவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் வழக்கமாக ஜனநாயகக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிபர் டிரம்ப் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். சென்ற தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலும் மிகக் கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இதில் கணிசமான தொகுதியை தன் பக்கம் இழுக்க வேண்டும் என டிரம்ப் நினைக்கிறார். அதுதான் அவர் ‘ஹவ்டி மோடியில் கலந்துகொள்ளக் காரணம்.

அமெரிக்க நலன் அல்ல, டிரம்ப்பின் தனிப்பட்ட நலனே அதற்குக் காரணம் என்பது பலராலும் கூறப்பட்ட உண்மை. அமெரிக்க பத்திரிகைகள் அது உண்மையில் டிரம்ப்பிற்கு பலன் தருமா என்பதை விவாதித்தன. இந்திய நலனா? மோடியின் நலனா? இந்தியாவின் நலன் என பாரதீய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ், சங் பரிவாரம் நினைப்பதற்கும், இந்தியாவின் உண்மையான நலனுக்கும் நிறைய இடைவெளி, கடுமையான முரண் இருக்கிறது. ஆர்எஸ்எஸ் இன்னும் இந்திய பிரிவினை காலத்து மனோநிலையிலேயே சிக்கியுள்ள அமைப்பு. பாகிஸ்தானையும், இஸ்லாமியர்களையும் எதிரிகளாகச் சித்தரித்து இந்தியாவில் ஒரு பாசிச அரசை நிறுவுவதுதான் அவர்களது விருப்பம்.

இது இந்தியாவின் நலன்களுக்கு, அதன் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உகந்ததல்ல. காரணம், இந்தியா போன்ற அளப்பரிய பன்மைத் தன்மை கொண்ட நாட்டில் ஒற்றை அடையாள பாசிச அரசை உருவாக்க முயன்றால் உள்நாட்டு அமைதி சீர்கெடும். மிகப்பெரிய அளவில் மக்கள் ஆதரவைப் பெற்ற தலைவராக இருந்தபோதுதான் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். பதினெட்டு மாதங்களில் நாடெங்கும் கலவரங்கள் தோன்றின. அதற்குப் பின்னால் தேர்தல் வைத்தபோது கடும் தோல்வியைச் சந்தித்தார். காஷ்மீர் மாநிலத்தின் விசேஷ அந்தஸ்தை நீக்கவேண்டுமென்பது ஒரு கோரிக்கை. ஆனால், மோடி அரசு இரண்டாம் முறை பதவியேற்றதும் காஷ்மீரின் மாநில அந்தஸ்தையே பறித்து அங்குள்ள தலைவர்களையெல்லாம் சிறையில் அடைத்துவிட்டது. எழுபது லட்சம் மக்களை தகவல் தொடர்பு இணைய வசதி இல்லாமல், கிட்டத்தட்ட திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்துள்ளது.

அதையடுத்து குடியுரிமை சீர்திருத்த சட்டம் என்பதை நிறைவேற்றி குடியுரிமைக்கும், மத அடையாளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்த முயல்கிறது. இதன் நீண்ட கால நோக்கம் முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்குவதுதான் என்ற ஐயம் உலகம் முழுவதும் அரசியலாளர்கள், சிந்தனையாளர்களிடம் உள்ளது. உள்நாட்டில் மக்கள் இந்த சட்டத்தை எதிர்த்து கடுமையாகப் போராடி வருகிறார்கள். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் சர்வதேச பரிமாணம் உள்ளது. பாகிஸ்தான் உட்பட வளைகுடா இஸ்லாமிய நாடுகள் இந்த சூழ்நிலையை கவனித்து வருகின்றன. சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை. எனவே, மோடி அரசுக்கு அதிபர் டிரம்ப்பின் ஒத்துழைப்பு தேவை. அவர் தனிமனிதராக அமெரிக்காவின் கொள்கையை வடிவமைக்க முடியாது என்றாலும், உடனடியாக அமெரிக்கா எவ்வளவு தூரம் தலையிடுகிறது என்பதைக் கட்டுப்படுத்த முடியும்.

இதையெல்லாம் கடந்து டிரம்ப், மோடி இருவருமே கார்ப்பரேட் தேசிய நோக்கும், வலதுசாரி பிற்போக்குப் பார்வைகளும் கொண்டவர்கள். அவர்கள் கட்சிகளும் அப்படியே. டிரம்ப்பின் நடவடிக்கைகள் உலக சமாதானத்திற்கும், நல்வாழ்விற்கும் உலை வைத்துவிடும் என்றே பல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அவர் ஆரோக்கியமான மனநிலை உள்ளவரா என்பதையே சந்தேகிக்கிறார்கள். எனவே ‘ஹவ்டி மோடி...  நமஸ்தே டிரம்ப்...’ நிகழ்ச்சிகளெல்லாம் மோடி, டிரம்ப் மற்றும் அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சி, பாரதீய ஜனதா கட்சி ஆகியவற்றிற்கு இடையிலான நல்லுறவுதானே தவிர, இரண்டு தேசங்களுக்கான நல்லுறவின் வெளிப்பாடு அல்ல. ‘வரலாற்றில் டிரம்ப்பின் இந்த வருகை புதிய சகாப்தம்’ என்றார் மோடி. அது உண்மைதான். ஓர் இந்தியப் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்கு சேகரிப்பது என்பது இதற்கு முன் நிகழ்ந்ததில்லை!

பாரதீய ஜனதா சிந்தனையாளர்கள் வெளிப்படையாகவே இதை ஏற்கிறார்கள். ‘ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்’ என்று இந்தியப் பிரதமர் அமெரிக்க உள்நாட்டுப் பிரச்னையில், தேர்தலில் தலையிட்டது சரியான அணுகுமுறை தான் என்கிறார்கள். தங்கள் பாசிச அரசியலுக்கு டிரம்ப்தான் உதவுவார் என்கிறார்கள்.உண்மையான இந்திய நலனிலும், உலக நலனிலும் அக்கறை உள்ளவர்கள் இதை ஏற்கமாட்டார்கள்.

தொகுப்பு: ராஜன் குறை

Tags : Modi , Modi went to the US in September after winning the Indian parliamentary election and becoming the second prime minister.
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...