×

நாட்டைக் காக்க வீதிக்கு வந்த வண்ணாரப்பேட்டை பெண்கள்!

நன்றி குங்குமம்

சோசலிச புரட்சியானாலும் சரி, அதற்குப் பிறகு வந்த சுதந்திரப் போராட்டமானாலும் சரி, வரலாறு நெடுகிலும் பெண்களுக்கான போராட்டங்கள் வலுவாகவே இருந்திருக்கின்றன. பெண்களும் அதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். தலைநகர் தில்லி ஷாஹின்ஃபாகில் இரண்டு மாதங்களைக் கடந்து பெண்களால் நடத்தப்படும் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை வண்ணாரப் பேட்டையில் இஸ்லாமியப் பெண்களின் தொடர் போராட்டம் பத்து நாட்களாக இரவு பகலாக இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது.

பெண்கள்... கைக்குழந்தைகள்... சிறுவர் சிறுமியர்... முதியவர்கள்... என ஒரே இடத்தில் அமர்ந்து போராடி வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதே வண்ணாரப்பேட்டை பெண்களின் கோரிக்கை. தீர்மானம் நிறைவேற்றப்பட மாட்டாது என சபாநாயகர் பேரவையில் திட்டவட்டமாக அறிவிக்க, பெண்களின் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. போராட்டங்களைத் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் சென்னை நகர காவல்துறை ஆணையர் ஈடுபட்டும் பலனில்லை.

இஸ்லாமியர்கள் பெண்களை வெளியே விடமாட்டார்கள் என்ற நிலை மாறி இருக்கிறது. ஆண்களைக் கண்டால் புர்காவிற்குள் முகத்தை மறைப்பவர்கள், தைரியமாக முன்வந்து வீதிகளில் நிற்கிறார்கள். வண்ணாரப்பேட்டை குடியிருப்புப் பகுதியின் இரண்டு தெருக்களும் விண்ணை முட்டும் முழக்கங்களோடு இஸ்லாமியப் பெண்களால் நிறைந்திருக்கின்றன. இந்த தைரியம் எப்படி வந்தது என்ற கேள்விகளோடு போராட்டக் களத்தில் இருந்த பெண்களில் சிலரை அணுகியபோது…செனாஷ் பானு, வழக்கறிஞர்:14ம் தேதி கலவரத்திற்குப் பிறகே நாங்கள் வெகுண்டு எழுந்திருக்கிறோம். நாங்கள் என்ன தவறு செய்தோம்... எதற்காக காவல்துறை எங்கள் மீது லத்தி சார்ஜ் செய்தார்கள்..? நாங்கள் வன்முறையையோ கலவரத்தையோ தூண்டவில்லை. அகிம்சை முறையில் எங்கள் உரிமைக்காகப் பெண்களாக இணைந்து போராடினோம்.

காவல்துறை கூட்டத்தைக் கலைக்கச் சொல்லி எங்களிடம் பேசினார்கள். நாங்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்த நிலையில், காவலர் எண்ணிக்கை அதிகமானது. 7 மணிக்குமேல் பெண்கள் மீது லத்தியைச் சுழற்றி அடிக்கத் தொடங்கினார்கள். அதைத் தடுக்க வந்த எங்கள் வீட்டு ஆண்களில் ஒருவரை முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் சேர்ந்து தாக்கினார்கள். அதை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.  பெண்களின் மீது கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், நாங்களும் முன்னே சென்றோம். ஆனால், காவல் துறையினர் எங்கள் மீது அசிங்கமான முறைகளில் கை வைத்ததோடு, மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள்.  

தண்ணீர் பாட்டில்களை எங்கள் மீது வீசியதோடு, தடுப்புக் கம்பிகளைத் தூக்கி எங்களை அடித்தார்கள். காவலர் ஒருவர் என் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்துச் செல்ல, மேலும் சில பெண்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் வண்டியில் ஏற்றினார்கள். என் கையில் 8 மாதக் குழந்தை... நான் என்ன தவறு செய்தேன்..? எதற்கு கைது செய்கிறீர்கள் எனக் கேட்டேன். அங்கிருந்த பெண் காவலர்களும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டார்கள். முழுக்க முழுக்க காவல்துறை எங்களுக்கு எதிரியாகச் செயல்பட்டார்கள்.

ஒரு பெண்காவலர் என் கைகளைப் பிடித்து இன்னொரு ஆண் காவலரின் கையில் ஒப்படைத்தார். காவல் உடையில் இருந்த ஒருவரின் கையில் ஆர்.எஸ்.எஸ் என எழுதியிருந்தது. நிறைய காவலர்களின் சட்டைகளில் பெயர் பேட்ஜ் இல்லை. இருந்த சிலரும் பெயர்களை மறைத்திருந்தார்கள். கைது செய்து கொண்டு சென்ற எங்களை நள்ளிரவு 12 மணிக்குத்தான் விடுவித்தார்கள். அதுவரை எங்களுக்கு சாப்பாடோ தண்ணியோ கொடுக்கவில்லை. எங்களின் பாதுகாப்புக்கு ஒரு பெண் காவலர் கூட அங்கில்லை. உரிமைக்காகப் போராடியதற்கு ஏன் இத்தனை செய்கிறார்கள்..? எத்தனை கஷ்டம் வந்தாலும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும். கதீஜா பீபி, அக்குபஞ்சர் மருத்துவர்:

நான் பெண்கள் அமைப்பிலும் இருக்கிறேன். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா இந்தியாவாக இருக்காது; இந்து ராஷ்டிரமாக இருக்கும். அதனால்தான் முளையிலேயே கிள்ளி எறிய நினைக்கிறோம். ஆளும் பாஜக ஆட்சி செய்யாத 10 மாநிலங்களில் இந்தச் சட்டம் வேண்டாம் என ஏற்கனவே அறிவித்துவிட்டனர். அப்படியிருக்க பாஜக ஆட்சி செய்யாத தமிழக அரசு மட்டும் ஏன் அமல்படுத்துவோம் என்று பிடிவாதம் பிடிக்கிறது..? மற்ற மாநிலங்களுக்குத் தவறாகத் தெரியும் ஒரு சட்டம் இவர்களுக்கு மட்டும் சரியாகத் தெரிகிறதா..? இந்தியா ஜனநாயக நாடு. இங்கு அனைவருக்கும் எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த உரிமைகளின் அடிப்படையில் நாங்கள் போராட அனுமதி கேட்டோம். ஆனால், காவல்துறை எங்களை போராட்டக்காரர்களாக மாற்றிவிட்டார்கள்.  

நாங்கள் எந்த பொதுச் சொத்துக்கும் சேதாரம் ஏற்படுத்தவில்லை. எங்கள் வீடுகளின் அருகாமையில் உள்ள தெருக்களில் நின்று குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோஷமிட்டோம். பெண்களை காவல்துறை கைது செய்ய ஆரம்பிக்கவே அடிதடி, தள்ளுமுள்ளு, கலாட்டா ஆரம்பித்தது. ஒரு பெண்ணைத் தூக்க 10 பெண் காவலர்கள் முயல, பின்னால் இருக்கும் ஆண் காவலர் தன் பூட்ஸ் காலால் அந்தப் பெண்ணின் இடுப்பில் எட்டி உதைக்கிறார். அடிபட்ட பெண்களில் இருவர் மருத்துவமனையில் இன்னும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த அடக்குமுறை எங்களுக்கு கூடுதல் உத்வேகத்தைத்தான் தந்திருக்கிறது. காவலர்கள் தாக்கத் தொடங்கியதும் பெண்கள் திபுதிபுவென ஓடத் தொடங்கினர்.  எங்கள் குழந்தைகளை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும், கடைகளில் உள்ள ஷட்டர்களுக்குள்ளும் போட்டு ஷட்டர்களை இழுத்து மூடினோம். மயங்கி விழுந்தவர்களையும் தூக்கிக்கொண்டு வந்து ஷட்டர்களுக்குள் கிடத்தி வைத்தியம் பார்த்தோம்.  

எங்கள் பகுதியே போர்க்களமாக அன்று காட்சி தந்தது. பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் அலறி அடித்து ஓடுவதைப் பார்த்த முதியவர் ஒருவர் கலவரத்தைப் பார்த்த அதிர்ச்சியில் இறக்க நேரிட்டது. முப்பது, நாற்பது பெண்கள் அடிபட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்தப் பிரச்னைக்குப் பிறகே நாங்கள் இன்னும் வலுவாக முடிவெடுத்தோம். மேலும் ஆயிரக்கணக்கில் பெண்கள் கூடினார்கள். நாங்கள் பொறுப்புள்ள இந்தியக் குடிமக்கள். சுதந்திரத்திற்காக எங்கள் முன்னோர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தாரக மந்திரம். இந்தப் போராட்டம் எல்லா மதத்தினருக்குமானது. நாங்கள் ஈழத் தமிழர்கள், தலித் மக்கள், பழங்குடியினருக்கும் சேர்த்தே போராடுகிறோம்!

ஃபாத்திமா, குடும்பத் தலைவி: எனக்கு இரண்டு குழந்தைகள். என் குழந்தைகளுடன் அருகில் படுத்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. என் 3 வயதுக் குழந்தை என் கையிலேதான் படுத்துத் தூங்குவான். இன்று அவன் என்னைப் பிரிந்திருக்கிறான். எந்த இஸ்லாமியப் பெண்ணாவது நடுரோட்டில் தர்ணா செய்து பார்த்திருக்கிறீர்களா? 8 மணிக்குமேல் நாங்கள் வெளியில் வரமாட்டோம். உறவினர் வீடுகளுக்குக் கூட மாலை 6 மணிக்கு மேல் இருட்டிய பிறகே அழைத்துச் செல்வார்கள். ஆனால், இன்று இரவு பகலாக ரோட்டில் நின்று போராடுகிறோம். கோஷம் போடுகிறோம். குடும்பத்தை விட்டு தெருக்களில் விடிய விடிய படுத்திருக்கிறோம்.நான்கு தலைமுறை கடந்து 150 வருடங்களாக நாங்கள் இங்குதானே இருக்கிறோம். எங்களிடம் ஆதார் அட்டைகள் இருக்கின்றன. பிறகெதற்கு இத்தனை ஆதாரங்களைக் கேட்கிறார்கள்..?

குடியுரிமை திருத்தச் சட்டம் குறிப்பிட்ட எங்கள் மதத்தை மட்டுமே பாதிக்கிறது. என்பிஆர் - என்.ஆர்.சி அவசியமற்ற ஒன்று. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு செய்கிறீர்களா... தாராளமாக வந்து எடுங்கள். அதை விடுத்து, அப்பா, அப்பாவுக்கு அப்பா, அவருக்கு அப்பா என்று பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கேட்டால் எப்படித் தரமுடியும்? நாங்கள் இந்த நாட்டின் பூர்வ குடிகள். எங்கள் ஒவ்வொருத்தரின் தாத்தா, பாட்டி பெயர்கள்தான் இந்தியா கேட்டில் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. சென்று பாருங்கள். மொத்தம் இருக்கும் 99 ஆயிரம் பெயர்களில் 61 ஆயிரம் பெயர்கள் எங்கள் மூதாதையர் பெயர்கள்.

இந்தச் சட்டத்தை இயற்றியவர்களின் தாத்தா பெயர் என்று ஒன்றைக் காட்டச் சொல்லுங்கள்... எங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். நீங்கள் வரலாறுகளை தனக்குத்தானே உருவாக்கிக் கொள்கிறீர்கள். ஆனால். எங்கள் வரலாறு எங்களைப் படைத்திருக்கிறது. எங்கள் மூதாதையர்கள் மிகவும் வரலாற்றுக்குரியவர்கள். எந்தக் காலத்திலும் இந்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம். சனாஷ், குடும்பத் தலைவி: இன்று வீட்டில் இருக்கிறோம். நாளை இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எங்கிருப்போம் எனத் தெரியாது. நாங்கள் இந்தியர்கள் இல்லை என்று சொன்னால் எங்கே செல்வோம்? எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் இங்கே கேள்விக்குறியாகி இருக்கிறது.

சென்னைப் பெருவெள்ளம், ஜல்லிக்கட்டு போராட்டம் என அனைத்திலும் இஸ்லாமியர்கள் வந்து நின்றார்கள். உதவினார்கள். இன்று அவர்களுக்கு ஒரு பிரச்னை வரும்போது நாங்களும் உடன் நிற்போம் என தன்னார்வமாய் பலர் வருகிறார்கள். எங்களுக்கு வழங்கப்படும் உணவு, தண்ணீர், பாதுகாப்பு, மருத்துவம், அவசர உதவி என மற்ற உடனடித் தேவைகளை எங்கள் தொப்புள்கொடி உறவுகளான இஸ்லாமிய அமைப்புகளே ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்.எங்களுக்குத் தலைமையெல்லாம் இல்லை. போராட்டக் களத்தில் இருந்தவர்களில் சில பெண்கள் நாங்களாகவே முன் வந்து சில பொறுப்புகளை கையிலெடுத்திருக்கிறோம்.

இதில் 150 தன்னார்வப் பெண்கள் இருக்கிறோம். உணவு வழங்க ஒரு குழு, உணவுப் பொருட்கள் சரியாக வழங்கப்பட்டதைக் கவனிக்க ஒரு குழு, மேடையைக் கவனிக்க ஒரு குழு, கோஷம் போடுவதற்கு ஏற்பாடு செய்யத் தனி குழு, ஊடகங்களை வரவேற்று தேவையானதைச் செய்ய ஒரு குழு, போராட்டக் களத்திற்குள் உள்ளே வருபவர்களை எங்கிருந்து எதற்காக வருகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு குழு... என எங்களுக்குள் பிரித்து கட்டுக்கோப்பாகச் செயலாற்றி வருகிறோம்.

இது இஸ்லாமியர்கள் போராட்டம் கிடையாது! இது ஒட்டுமொத்த இந்தியர்களின் போராட்டம். இந்த நாட்டின் மதச்சார்பின்மையைக் காக்க, தன் குடும்ப நலனைத் துறந்து இஸ்லாமியப் பெண்கள் முன்னணியில் நின்று போராடுகிறார்கள். கூட்டம்... சத்தம்... முழக்கம்... மேடைப் பேச்சு... என 10 நாட்களைக் கடந்திருக்கிறார்கள். நேரில் வந்து பார்த்தால்தான் இவர்களின் கஷ்டம் புரியும். இஸ்லாமியர்கள் போராட்டம் செய்கிறார்கள் என பொதுச் சமூகம் எளிதாகக் கடக்காமல், சிந்தித்து உணர்ந்து இந்தப் போராட்டத்திற்கு வந்து ஆதரவு தர வேண்டும். இல்லையெனில் இது இஸ்லாமியர்களை உளவியலாய் தனிமைப்படுத்தும்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்


Tags : Girls ,street ,country ,Women , The struggles for women have been strong throughout history, whether it was the socialist revolution or the freedom struggle that followed.
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே