×

குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நல்ல முடிவாக இருக்கும் : இஸ்லாமிய மத குருமார்களுக்கு ரஜினிகாந்த் கோரிக்கை

சென்னை : குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இஸ்லாமிய மத குருமார்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் மன்ற மாவட்ட செயலாளார்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளார்களுடன் ஆலோசனை

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளார்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையின் போது, புதிய கட்சி அறிவிப்பு, மாநாடு நடத்துவது மற்றும் மக்களின் ஆதரவு குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய தலைவர்களுடன் சந்திப்பு இனிமையானது

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் தம்மிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பியதாகவும், அதற்கு தான் அளித்த பதில் திருப்தியாக இருந்ததாக அவர்கள் தெரிவித்ததாக கூறினார். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தனக்கு ஏமாற்றம் இருந்ததாகவும், அது என்ன என்று பிறகு தெரிவிப்பதாக ரஜினி தெரிவித்தார். இஸ்லாமிய தலைவர்களுடன் சந்திப்பு இனிமையானது என்று தெரிவித்த ரஜினிகாந்த்,  என்பிஆர், என்ஆர்சி,சிஏஏ பற்றி இஸ்லாமிய தலைவர்கள் தன்னிடம் விளக்கியதாகவும் சகோதரத்துவம், அன்பு, அமைதி நாட்டில் நிலவ வேண்டும் என்று முஸ்லீம் மதகுருக்கள் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை நடத்த
ரஜினிகாந்த் கோரிக்கை

மேலும் தங்களது கோரிக்கைகள் குறித்து இஸலாமிய மதகுருமார்கள், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது நல்ல முடிவாக இருக்கும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதற்கு தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்வேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். அரசியலில் நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து செயல்படுவீர்களா என்றும் ரஜினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமலுடன் இணைந்து அரசியல் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Modi ,negotiations ,Rajinikanth ,clergy ,hold talks , Actor, Rajinikanth, Raghavendra, Politics, Access, People's Forum, Consultation
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...