×

வாடிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பதவியை போராடி வென்றது அதிமுக: துணை தலைவர் தேர்தலில் திமுக வென்றதால் அதிமுகவினர் விரக்தி

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக பேராடி வெற்றி பெற்ற நிலையில், துணை தலைவர் தேர்தலில்  திமுக வெற்றி பெற்றதால் அதிமுகவினர் விரக்தியடைந்தனர்14 ஒன்றிய கவுன்சிலர்களை உள்ளடக்கியது வாடிப்பட்டி ஒன்றியம். இந்த ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 6பேரும், அதிமுக  சார்பில் 7பேரும் சுயேட்சையாக ஒருவரும் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு இரண்டு முறை தேர்தல்  அறிவிக்கப்பட்டது. ஆனால் முதல்முறை ஒன்றியகுழு தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் அக்கட்சி ஒன்றிய கவுன்சிலர் மகாலெட்சுமி  ராஜேஸ்கண்ணா அறிவிக்கப்பட்டதால் திருவேடகம் பகுதி அதிமுக கவுன்சிலரான வசந்தகோகிலா சரவணன் அன்றைய தேர்தலை புறக்கணித்தார்.  இதனால் போதிய கோரமில்லை என கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது அதிமுக சார்பில்  வசந்தகோகிலா ஒன்றியகுழு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அன்றைய தினம் கச்சைகட்டி அதிமுக கவுன்சிலர் பவித்ரா  தேர்தலை புறக்கணித்தார். இதனால் இரண்டாவது முறையாக ஒன்றியகுழு தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் இப்பிரச்சினையில் அதிமுக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலையிட்டு அதிமுகவினரை சமரசப்படுத்தி மீண்டும்  வாடிப்பட்டி ஒன்றியகுழு தலைவர் பதவிக்கான வேட்பாளராக மீண்டும் மகாலெட்சுமி ராஜேஸ்கண்ணாவை அறிவித்தனர். அதனை தொடர்ந்து நேற்று  நிறுத்திவைக்கப்பட்ட ஒன்றியகுழு தலைவர் தேர்தல் மூன்றாவது முறையாக நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் மகாலெட்சுமி  ராஜேஸ்கண்ணாவும், திமுக சார்பில் பசும்பொன்மாறனும் வேட்புமனுதாக்கல் செய்தனர். பின்னர் நடைபெற்ற மறைமுக வாக்குப்பதிவில் அதிமுக  வேட்பாளர் மகாலெட்சுமி 8வாக்குகள் பெற்று வாடிப்பட்டி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ  மாணிக்கம், அதிமுக நிர்வாகிகள் செல்லப்பாண்டி, பாப்புரெட்டி, முனியசாமி, ராஜேஸ்கண்ணா உள்ளிட்டோர் மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஒன்றிய குழு தலைவர் தேர்தலை தொடர்ந்து துணை தலைவருக்கான தேர்தல் மாலை 3 மணியளவில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில்  தனலெட்சுமி கண்ணனும், அதிமுக சார்பில் சுயேட்சையாக வெற்றிபெற்று அதிமுகவில் இணைந்த கார்த்திகா என்பவரும் போட்டியிட்டனர். பின்னர்  நடைபெற்ற மறைமுக வாக்குப்பதிவில் அதிமுக கவுன்சிலர்களில் ஒருவர் அணிமாறி திமுக கவுன்சிலருக்கு வாக்களித்தார். இதனால் இருவரும் தலா  7வாக்குகள் பெற்றனர். அதனைத் தொடர்ந்து குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் தனலெட்சுமி வெற்றி பெற்றார். இதனால்  விரக்தியடைந்த சுயேட்சை கவுன்சிலர் கார்த்திகா சோகத்துடன் ஒன்றிய அலுவலகத்திலிருந்து வெளியேறினார். திமுக சார்பில் போட்டியிட்டு  வெற்றிபெற்ற ஒன்றிய குழு துணை தலைவருக்கு திமுக நிர்வாகிகள் சேகர், பால்பாண்டியன், பிரகாஷ், கோகுல்நாத், ராஜாஜி, அய்யாவு உள்ளிட்டோர்  மாலை அணிவித்து
வாழ்த்தினர்.

அண்ணா சிலையை அவமதித்த அதிமுகவினர்
காலை நடைபெற்ற  ஒன்றியகுழு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினர், மாலையில் நடந்த துணை தலைவர் தேர்தலிலும் வெற்றி  பெற்றவுடன் தலைவர், துணை தலைவருடன் இணைந்து வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதாக கூறியிருந்தனர். ஆனால் அதிமுக  உட்கட்சி பூசலால் துணை தலைவர் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் தோல்வியடையவே விரக்தியடைந்த அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை  அணிவிக்கவில்லை. ஆனால் திமுகவினர் ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து அண்ணா சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஒன்றிய தலைவர் தேர்தலில் முறைகேடு: திமுக புகார்
வாடிப்பட்டி ஒன்றிய தலைவருக்கான தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில் விதியை மீறி எண்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக புகார்  கூறிய திமுகவினர் இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : Wadipatti ,DMK ,union committee chairperson ,The AIADMKs , DMK wins, Wadipatti,frustrated ,winning
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...