×

ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தைல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வறட்சி ஏற்படும் அபாயம்: வண்டு, பறவை, விலங்குகள் அழியும் அவலம்

புதுக்கோட்டை, மார்ச்5: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தைல மரங்களால் நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு  வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வண்டு, பறவை ,விலங்கினங்கள் அழியும் அவலம் உள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தைலமரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. ஏரி,  குளங்களுக்கு வரும் தண்ணீரை தடுக்கப்பட்டு மழை பெய்தாலும் ஏரி, குளங்களில் தண்ணீர் பெருக முடியாத நிலைதான் உள்ளது. ஒன்றுபட்ட திருச்சி  மாவட்டத்தோடு புதுக்கோட்டை சமஸ்தானப் பகுதிகள் இருந்திருந்தாலும், தஞ்சைப் பகுதியைப் போல மிகுதியான விவசாய வளத்தைக் கொண்ட  பகுதியாகும். வானம் பார்த்த பூமியாக இருந்த காலத்தில் இருந்து கம்பு, சாமை, எள், கொள்ளு என செழித்துக் வளர்ந்த பகுதியாக இருந்தது. ஏறத்தாழ  85 ஆயிரம் ஏக்கர் காப்புக்காடுகளைக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலை தற்போது வேறு விதமாக மாறிவிட்டது. புதர்க்காடுகளிலும்,  மரக்காடுகளிலும் மான், மயில், நரி, முள்ளம்பன்றி, குள்ளநரி, முயல், குரங்குகள் ஏராளம் இருந்துள்ளன. இரண்டரை லட்சம் எக்டேர் புஞ்சையும்,  ஒன்றரை லட்சம் எக்டேர் நஞ்சையும் கொண்ட விவசாயம் நிறைந்த மாவட்டமாக புதுக்கோட்டை இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய நிலை  முற்றிலும் மாறிவிட்டது. புதுக்கோடடை மாவட்டத்தில் தற்போது வறட்சியின் காரணமாக விவசாயம் மட்டும் அழியவில்லை. புதுக்கோட்டையின்  வெப்பமும் அதிகரித்திருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள காப்புக்காடுகளில் பெய்யும் மழை நீர் வடிந்து ஏறத்தாழ 6 ஆயிரம் குளங்களை நிரப்பி பாசனத்தைக் கொடுத்துக்  கொண்டிருந்தது. இப்போது 6 ஆயிரம் குளங்களும் வறண்டு கிடக்கின்றன. குளம் வறண்டாதால் இந்த குளத்தில் பாசனம் பெற்று விவசாயத்தில்  ஈடுபட்ட விவசாய குடிகளும் வருமானம் இன்றி தவிக்கின்றனர். நிலத்தின் பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொடுப்பது எல்லா வகையான மரங்களும்,  எல்லா வகையான பூச்சிகள், விலங்குகளும்தான். தைல மரம் தன்னுடன் வேறெந்த செடியைக் கூட வளர விடாது என்பது மட்டுமல்ல, ஒரு புழு கூட  அந்தத் தோப்பில் வாழ முடியாது. புழு, பாம்பு இல்லாவிட்டால் மயில் இல்லை, பறவைகள் இல்லை. இவை அழிந்ததால் மொத்த மாவட்டத்தின்  பல்லுயிர்ப் பெருக்கமும் அழிந்து போனது. பொன்வண்டு என்ற சிறு வண்டினம் கூட அழிந்தது. கழுகுகளைப் பார்க்கவே முடியவில்லை. மாவட்டத்தில்  நிலவும் வறட்சிக்கு முக்கிய காரணமாக அனைத்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், சூழ்நிலையாளர்கள் என அனைத்து தரப்பினும் இந்த  மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தைலமரக்காடுகள் தான் என்று குற்றஞ்சாட்டு கின்றனர்.

இதுகுறித்து மூத்த விவசாயிகள் கூறியதாவது:1974ல் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகளில் தைல மரங்களை வளர்க்கும் திட்டத்தை நிறைவேற்றி  தொடங்கியது. அன்றில் ஆரம்பித்து இந்த துயரம் தான் இன்று பெரிய அளவில் வளர்ந்து விருட்சம் அடைந்து கிடக்கிறது. மற்ற மாவட்டங்களைப்  போல, எங்கிருந்தோ நதியில் இருந்தோ, மலையில் இருந்தோ தண்ணீர் எங்களுக்கு வராது. இங்குள்ள காப்புக்காட்டில் பெய்யும் மழைதான் குளத்தில்  தேங்கும். வறட்சியைத் தாங்கி வளரும் எனக் கூறப்படும் தைல மரத்தை வைத்த வனத்துறையினர் அங்கிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியே  வராத அளவுக்கு கரைகளைப் போட்டு தடுத்து விட்டனர். குளங்கள் வறண்டன. காற்றிலுள்ள ஈரப்பதத்தையும் தைல மரங்கள் உறிஞ்சிக் கொள்ளும்  என்பதால் புதுக்கோட்டையின் வெப்பம் தகிக்கத் தொடங்கிவிட்டது. போதாக்குறைக்கு கஜா புயலால் லட்சக்கணக்கான மரங்களை இழந்து நிற்கிறோம்.  வேறு வழியே இல்லை, தைல மரங்களை அகற்ற வேண்டும்.

வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏறத்தாழ 55 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும், 30  ஆயிரம் ஏக்கர் தனியார் நிலங்களிலும் இந்த தைல மரக்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. காகிதம் தயாரிக்க வெளிநாடுகளில் இருந்து தைலமரக் கூழ்  உள்ளிட்டவற்றை குறைந்த விலையில் இறக்குமதி செய்யலாம். சவுக்கு உள்ளிட்ட வேறு மரங்களையும் வளர்க்கலாம். ஆனால் தைலமரத்தை  வளர்த்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் மாவட்டம் முழுவதும் விவசாயம் பொய்த்து போய் உயிரினங்கள் அழியும் என்றனர்.இரண்டரை  லட்சம் எக்டேர் புஞ்சையும், ஒன்றரை லட்சம் எக்டேர் நஞ்சையும் கொண்ட விவசாயம் நிறைந்த மாவட்டமாக புதுக்கோட்டை இருந்து வந்துள்ளது.  ஆனால் தற்போதைய நிலை முற்றிலும் மாறிவிட்டது

Tags : drought , Groundwater, absorption,extinction
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!