×

கள்ளக்குறிச்சி சித்தேரியில் தேங்கி கிடந்த கழிவுநீர் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சித்தேரியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சித்தேரி. சுமார் 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், மழைகாலங்களில் தேங்கும் தண்ணீரை கொண்டு அப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்து வந்தனர். இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தது. இது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் நாளுக்குநாள் தனி நபர் ஆக்கிரமிப்பில் சிக்கி, ஏரியின் பரப்பளவு சற்று குறைந்துள்ளது. நகர விரிவாக்கம் செய்யப்பட்டதால் சித்தேரியின் சுற்றுப்புற பகுதியில் குடியிருப்பு வீடுகள் அதிகரித்தது. இதனால் இந்த ஏரிக்கான தண்ணீர் வரத்து வாய்க்கால் தூர்ந்துபோனது.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்புகளின் சாக்கடை கழிவுநீரை ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் திறந்து விடுவதால் சித்தேரியில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கடந்த ஆண்டு அதிமுக நகர செயலாளர் பாபு  தலைமையில் சமூக ஆர்வலர்கள் ஏரியில் தேங்கி கிடந்த கழிவுநீரை வெளியேற்றினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியை ஆழப்படுத்தி தூர்வாரப்பட்டது. அதன்பிறகும் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் ஏரியில் திறந்து விடப்பட்டது. இதனால் தற்போது ஏரியில் அசுத்தமான நிலையில் பச்சை நிறத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், மக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கி கிடக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்பட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து கடந்த 2 ம்தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சித்தேரிக்கு வரும் கழிவுநீரை தடுக்கவும், ஏரியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கும்படி கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) மற்றும் நராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி மதகை திறந்துவிட்டனர். அதனை தொடர்ந்து ஏரியில் தேங்கி கிடந்த கழிவு நீரானது கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெங்கடாசலம் சித்தேரி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் கவுன்சிலர் முருகன் உடனிருந்தார். கழிவுநீர் வெளியேறி வருவதால் ஏரி குடியிருப்பு பகுதியில் நேற்று துர்நாற்றம் சற்று குறைந்தது. தேங்கி கிடந்த கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் அரசு மருத்துவமனை கழிவுநீர் மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் சித்தேரிக்கு செல்லாதவாறு முழுமையாக தடுக்க ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Kallakurichi Siddheri , Counterfeit, sewer, disposal, collector, action
× RELATED கள்ளக்குறிச்சி சித்தேரியில் தேங்கி கிடந்த கழிவுநீர் அகற்றம்