×

திருக்கோவிலூர் அருகே கூட்டு குடிநீர் பைப் லைன் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

திருக்கோவிலூர்:  திருக்கோவிலூர் அருகே கூட்டு குடிநீர் திட்டத்தின் பைப் லைன் பழுதானதால், குடிநீர் வீதிகளில் வீணாக வெளியேறி வருகிறது. கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் இருந்து கடந்த  பத்து வருடமாக செஞ்சி வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இதன் மூலம் பல கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் வடகரைதாழனூரில் பேருந்து நிறுத்தம் அருகே கூட்டுகுடிநீர் திட்ட பைப் லைன் பழுதடைந்து கடந்த ஒரு  வருடமாக குடிநீர் தினந்தோறும் பல ஆயிரம் லிட்டர் வீணாகி அங்குள்ள  சாலையில் ஆறு போல் ஓடுகிறது. மேலும் அங்கு பள்ளம் போல்  உருவாகியுள்ளதாலும், வளைவு பகுதி என்பதாலும் தினந்தோறும் இரு சக்கர  வாகனத்தில் செல்பவர்கள் அதில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.  

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் வாட்டர் கம்பெனிகளுக்கு அதிகாரிகள்  சீல் வைத்துள்ளனர். இந்நிலையில் கோடைகாலம் நெருங்கி விட்டதால் வாட்டர் கேனுக்கு  கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி பகுதி  வறட்சி பகுதி என்பதால் தான் அந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம்  நிறைவேற்றப்பட்டது. ஆனால் பைப் லைன் பழுதாகி கிடப்பதால் இனிவரும் காலங்களில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகுமா என கேள்வி எழுந்துள்ளது. எனவே கோடை காலத்தில்  செஞ்சி பகுதியில் ஏற்படும் குடிநீர் தட்டுபாட்டை போக்க  பழுதான  குடிநீர் பைப் லைனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : district administration ,Tirukovilur , Tirukovilur, Joint Drinking Water Pipe, District Administration
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்