×

கோயில் கட்டிடத்தை புதுப்பிக்க கருவறையை தோண்டியபோது 3 ஆயிரம் ஆண்டு பழமையான மரகத லிங்கம் கண்டெடுப்பு: குடியாத்தம் அருகே பரபரப்பு

குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த பெரும்பாடி அருகே கோயில் கட்டிடத்தை புதுப்பிக்க கருவறையை தோண்டியபோது, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம், அரசரின் கல்லறை கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி  அருகில் மூங்கப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் இருந்து மீனூர் மலை செல்லும் வழியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலின் அருகில் அடர்ந்த முட்புதருக்குள் பழமையான கோயில் கட்டிடம் ஒன்று இருந்தது. இதனை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் திட்டமிட்டனர்.  இதற்காக பழைய கோயிலின் கருவறையை நேற்று தோண்டியபோது 3 ஆயிரம் ஆண்டு பழமையான சுமார் 400 கிலோ எடை கொண்ட மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்ததும் கிராமமக்கள் வியப்படைந்தனர். இந்த கோயிலின் கட்டிடத்தை புதுப்பித்து கட்ட திட்டமிட்டதால் அங்கிருந்த மரகத சிவலிங்கத்தை தற்காலிகமாக பீடம் அமைத்து அதன் மேல் வைத்து சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இந்த தகவலறிந்த பெரும்பாடி, மூங்கப்பட்டு, சபரிநகர், முல்லைநகர், கன்னிகாபுரம் அக்ராவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மரகத லிங்கத்தை தரிசித்து வழிபட்டு வருகின்றனர். இந்த மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்ட கருவறையை சுற்றி பழங்கால அரசர்கள் போரில் ஈடுபட்டதன் நினைவாக, குதிரை மீது மன்னர் அமர்ந்து கையில் வாள் வைத்திருப்பது, வில் அம்பு ஏந்தி வேட்டைக்கு செல்வது மற்றும் ஈட்டியுடன் வீரர்கள் போர் செய்வது போன்ற கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அடங்கிய சுற்று சுவர் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், இந்த இடத்திற்கு 30 அடி தூரத்தில்  பழமையான குளம் ஒன்றும் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இக்குளம் படிகள் அமைப்புடன் சுமார் 50 அடி  நீள அகலத்தில் 10 அடி  ஆழம்கொண்டு   காணப்படுகிறது. இக்குளத்தின்  நடுவில் நான்கு கால் மண்டபம் ஒன்று இருந்ததற்கான அடையாளம் உள்ளது. இங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அந்தக்காலத்தில் வாழ்ந்த மன்னரின் கல்லறை ஒன்றும் உள்ளது. அக்கோயிலின் தூண்கள் மிக பழமையான கட்டிட கலையை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சோழர்கள் காலத்தில் வட்ட வடிவ சிவ லிங்கத்தை வழிபட்டனர்

இதுகுறித்து  வரலாற்று ஆர்வலர் பெரும்பாடி  கண்ணபிரான் கூறுகையில், ‘இங்கே கிடைத்துள்ள மரகத லிங்கம் சதுர வடிவில் உள்ளதால் இது மிகவும் பழமையானதாகும். சோழர்கள் காலத்தில் தான் வட்ட வடிவ சிவலிங்கம் செய்து வழிபட தொடங்கினார்கள். இதுபோன்று சதுர வடிவ ஆவுடையார் மற்றும் சதுரவடிவ லிங்க அடிப்பாகம் கொண்ட அமைப்பு குறைந்தது 3ஆயிரம் முதல் 5ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றார்.

பழங்கால நகரம்

இவ்வளவு பழமையான லிங்கம் அமைந்துள்ள இடத்தை சுற்றிய  பகுதிகள் மற்றும் கிராமங்களின் பெரும்பாலான இடங்கள் பழமையான  கோயில்கள் மற்றும் அரசர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் இப்பகுதியில் பழங்கால நகரம் ஒன்று இருந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தொல்லியல் துறை இப்பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்தால் பழங்கால நாகரிகம் வெளிவர வாய்ப்புள்ளது என்று வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : lingam ,temple building , Temple building, sanctum, emerald lingam, abode
× RELATED சித்தலிங்கங்கள்