×

ஓசூர் அருகே மாந்தோப்பில் குட்டிகளுடன் தஞ்சமடைந்த யானைகள்: வனத்துறையினர் எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் அருகே சீபம் கிராமத்தில் 2 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைகள், அங்குள்ள மாந்தோப்பில் தஞ்சமடைந்துள்ளது. இதனால், சுற்றுவட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 6 யானைகள், அங்கிருந்து வெளியேறி அருகேயுள்ள சீபம் கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் தஞ்சமடைந்துள்ளது. இந்த கூட்டத்தில் 2 குட்டிகள் உள்பட 6 யானைகள் உள்ளன. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சூளகிரி வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

யானை கூட்டத்தில் 2 குட்டிகள் உள்ளதால், அதனை பாதுகாக்கும் முயற்சியில் யானைகள் ஆக்ரோஷமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைகளை வேடிக்கை பார்க்க, கிராம மக்கள் அப்பகுதியில் படையெடுத்து வருகின்றனர். இதனால், சீபம், சாமனப்பள்ளி, தவசானப்பள்ளி, கீரனப்பள்ளி, அலேசீபம், அஞ்சலகிரி, குரும்பரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், வனப்பகுதிக்குள் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அந்த யானைகளை சானமாவு வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Forest Department ,mantop ,Hosur , Hosur, Cubs, Elephants, Forest Department, Warning
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...