×

பெரியார் குறித்து அவதூறு கருத்து: ரஜினி மீதான நடவடிக்கை குறித்து பதில் அளிக்க போலீசுக்கு உத்தரவு

சென்னை: பெரியார் பற்றிய அவதூறு கருத்தை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் புகாரில் எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை காவல்துறை ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஜனவரி 14ம் தேதி நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துசென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார். இது பொய்யான தகவல் என்று கூறியும், பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ரஜினியை கண்டித்து பலர் போராட்டங்கள் நடத்தினர்.

இந்தநிலையில் திராவிடர் விடுதலை கழகம் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார். அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கடந்த 18ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இதுவரை  நடவடிக்கை எடுக்கவில்லை எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

அந்த மனு நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் புகாரில் எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags : Rajini ,Periyar , Periyar, slander comment, Rajini, action, directive
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...