×

தீபாவளி சீட்டு நடத்தியவர் குடும்பத்துடன் தலைமறைவு: அரசு பஸ்சை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

சென்னை: மதுராந்தகம் அடுத்த பூதூர் கிராமத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்தேவ் (50) என்பவர் பல ஆண்டுகளாக அடகுக்கடை நடத்தி, அப்பகுதி மக்களிடம் தங்க நகைகளை அடமானமாக பெற்றுக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். மேலும் ஈசூர், வள்ளிபுரம், எல்.என்.புரம் உள்பட பல்வேறு கிராம மக்களிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் தீபாவளி பண்டிகையின்போது தங்க நகை, மற்றும் பட்டாசு, இனிப்பு, மளிகை பொருட்கள், அரிசி, பாத்திரங்கள் உள்ளிட்டவை தருவதாக உத்தரவாதம் அளித்தார். இதை நம்பிய ஏராளமான மக்கள், மாதம்தோறும் ராம்தேவிடம் பணம் செலுத்தியுள்ளனர்.

ஆனால், கடந்த தீபாவளி சமயத்தில் பணம் கட்டியவர்களுக்கு நகை, பட்டாசு எதையும் அவர் கொடுக்கவில்லை. இதுபற்றி பொதுமக்கள் கேட்டபோது, ஓரிரு நாட்களில் கொடுப்பதாக கூறி காலம் கடத்தி வந்தார். திடீரென ஒருநாள் அவர் பூதூரில் நடத்தி வந்த கடையை இரவோடு இரவாக பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரிடம் பணம் கட்டியவர்கள் மற்றும் நகைகளை அடகு வைத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து படாளம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் மற்றும் நகைகளை பெற்று தருவதாக உறுதியளித்தனர். ஆனால், இதுவரை ராம்தேவை, போலீசார் கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில், மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் சாலை பூதூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் திரண்டனர். அங்கு, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது நகை, பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரி மறியலில் ஈடுபட்டனர். மேலும்,அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, படாளம் போலீசர், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசின, விரைவில் ராம்தேவை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : ticket holder , Diwali, ace holder, beheading, people, struggle
× RELATED தீபாவளி சீட்டு நடத்தியவர்...