×

பிஎஸ்-4 தொழில்நுட்ப வாகனங்களை மார்ச் 31க்கு பிறகு பதிவு செய்ய முடியாது: போக்குவரத்துத்துறை கமிஷனர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பிஎஸ்4 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யக் கூடாது என்று போக்குவரத்து துறை கமிஷனர் தென்காசி ஜவஹர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் காற்றுமாசு, பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதை தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக அரசு போக்குவரத்துக்கழகங்களில் மின்சார பஸ்களை அதிக அளவில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் கார், இருசக்கர வாகனம் போன்றவற்றில் மின்சார வாகனங்களை அதிக அளவில் அறிமுகம் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக காற்றுமாசை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பிஎஸ்4 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தமிழகத்தில் இந்த மாதம் இறுதி வரை மட்டுமே ஆர்டிஓ அலுவலகங்களில் இத்தகைய வாகனங்களை பதிவு செய்ய முடியும். அதன்பிறகு பதிவு செய்ய முடியாது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் தென்காசி ஜவஹர், ஆர்டிஓ அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய போக்குவரத்துதுறை ஆணையம் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பிஎஸ்4 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்று கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே இதன்படி மார்ச் 31க்கு பிறகு பிஎஸ்4 தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்ய முடியாது. மேலும் இந்த வாகனங்களை பதிவு செய்ய கூடுதல் அவகாசம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக ஆர்டிஓ அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தங்களது பகுதியில் உள்ள வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் டீலர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி விளக்கி கூற வேண்டும். அப்போது மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பிஎஸ்4 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்று கூற வேண்டும். பொதுமக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* என்ன எரிபொருள்?
காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் பிஎஸ்6 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் வாகனங்களை மட்டுமே ஏப்ரல் மாதத்திலிருந்து பதிவு செய்ய முடியும். எனவே தற்போது இத்தகைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. இதற்காக பிஎஸ்6 ரக வாகனங்களுக்கான எரிபொருளை எண்ணை தயாரிப்பு நிறுவனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளன.

Tags : Transport Commissioner ,PS , BS-4, Technical Vehicles, Registration, No, Traffic Commissioner, after 31st March
× RELATED மூலனூர் பாரதி வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு விழா