×

செயின், பிரேஸ்லெட், மோதிரம், வளையல் என நகைக்கடைக்கு சப்ளை செய்யும் அளவுக்கு கடத்தி வந்த ரூ.8.5 கோடி தங்கம் பறிமுதல்

* ‘தங்க பெண்கள்’ கைது
* விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பெண்களின் உள்ளாடையில் தங்க நகைக்கடையே இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ரூ.2 கோடி மதிப்புடைய 4.67 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பெண்களை கைது செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த மதுரையை சேர்ந்த சந்தானலட்சுமி (39), தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன்சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார். அவரை அதிகாரிகள் மீண்டும் உள்ளே அழைத்து சோதனை நடத்தினர்.

அப்போது அவரது உடமைகளில் எதுவும் இல்லை. பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று முழுமையாக சோதனை செய்தனர். உள்ளாடைக்குள் கொத்துக்கொத்தாக புத்தம் புதிய தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 85 தங்க செயின்கள், 17 பிரேஸ்லெட், 15 மோதிரங்கள், 2 வளையல்கள், 2 நெக்லஸ், 5 தாலிச்செயின் இருந்தன. அதன் மொத்த எடை 2 கிலோ 545 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.02 கோடி. இதையடுத்து அதே விமானத்தில் சென்னையை சேர்ந்த பாத்திமா (32) என்பவரும் சுற்றுலாப் பயணிகள் விசாவில் சென்றுவிட்டு வந்திருந்தார். அவருடைய உள்ளாடையில் 3 தங்க செயின்கள், 4 மோதிரங்கள் மற்றும் தங்கக்கட்டிகள் 425 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 18.2 லட்சம்.

மேலும், நேற்று காலை 8.30 மணிக்கு இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அப்போது இலங்கையை சேர்ந்த நிரோஷாலாக் மாலி (26) என்ற இளம்பெண் சுற்றுலாப்பயணிகள் விசாவில் சென்னை வந்திருந்தார். அவருடைய உள்ளாடைகளில் 300 கிராம் எடை தங்க கட்டிகள் இருந்தன. இதன்  மதிப்பு ரூ.13.5 லட்சம். இந்த பெண்களிடம் மட்டும் நகைக்கடை வைக்கும் அளவிற்கு தங்க நகைகள் நிறைந்து இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதேபோல, நேற்று காலை 7 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக காலை 8.30 மணிக்கு டெல்லி புறப்பட்டுச்செல்லும். விமானம் புறப்படுவதற்கு முன்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் ஒரு இருக்கையில் குஷன் சீட்டுகள் சற்று உயர்ந்தபடி இயல்புக்கு மாறாக இருந்தன. அதை சரி செய்ய முயன்றனர். சீட்டுகளுக்கு அடியில் பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து விமான நிலைய ஊழியர்கள் மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகம் இருந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பார்சலை சோதித்தனர். அதில், 14 தங்க கட்டிகள் இருந்தன. அதன் மொத்த எடை 1.4 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.63 லட்சம். இந்த தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விமானத்தின் உள் பகுதியில் உள்ள கேமரா, சுங்க சோதனை பகுதியில் பதிவான காட்சிகளை வைத்து கடத்தல் ஆசாமிகளை வலைவீசி தேடுகின்றனர்.

Tags : suppliers , Chain, bracelet, ring, bangle, jeweler, conductor, Rs 8.5 crore gold, seized
× RELATED 6-வது நாளாக தொடரும் கேன் குடிநீர்...