×

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் குறித்து ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை: முதல்வர் தகவல்

சேலம்: காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து விரைவில் ஆந்திரா-தெலங்கானா முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை, சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநில பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நிரப்பும் திட்டம் ரூ.565 கோடியில் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா சேலம் அருகே இடைப்பாடி மேட்டுப்பட்டி ஏரியில் நேற்று நடந்தது. திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

இந்த திட்டம் 11 மாதத்தில் நிறைவடையும். 12வது மாதத்தில் 100 ஏரிகளும் நீர் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னை தீர்ந்து விவசாயம் செழிக்கும். தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரம் ஏரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 26 ஆயிரம் ஏரிகள் என்று 40 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும் குடிமராமத்து திட்டத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2வது கட்டமாக ரூ.329 கோடி ஒதுக்கப்பட்டு அதில் 1439 ஏரிகளில் பணிகள் முடிந்துள்ளது. 2019- 2020ல் ரூ.500 கோடியில் 1829 ஏரிகள் குடிமராமத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 949 ஏரிகளில் பணிகள் முடிவடைந்துவிட்டது. இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை. இதேபோல் பருவ மழை நீரை சேமிக்க ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதில் ரூ.650 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. 3ஆண்டுகளில் தடுப்பணை திட்டங்கள் அனைத்தும் நிறைவு பெறும். காவிரி உபரிநீரை சேமிக்க கதவணைகள் கட்டும் திட்டமும் செயல்படுத்தப்படும். எந்த இடத்தில் கதவணை கட்டினால் விவசாயத்திற்கும்,நீர் சேமிப்புக்கும் வழிவகுக்கும் என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது. ஒரு சொட்டு நீரை கூட, வீணாக்கக் கூடாது என்ற நோக்கத்தில் நீர் மேலாண்மை திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.

தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் குறித்து ஆந்திர முதல்வருடன் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளனர். மேலும் தெலங்கானா முதல்வரையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முடிந்தவுடன் தமிழக முதல்வரான நானும், ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களும் சந்தித்து பேசி கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை எப்படி செயல்படுத்தலாம் என்பது குறித்து முடிவெடுப்போம். இந்த திட்டத்திற்காக ரூ.64 ஆயிரம் கோடியை ஒதுக்குவதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தமுடியும். இந்த திட்டம் நிறைவேறினால் ரூ.14ஆயிரம் கோடியில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் எளிதாக நிறைவேறும். இதன்மூலம் தென்மாவட்ட நீர் நிலைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு நீர் பிரச்னைகள் பெருமளவில் தீரும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை: முதல்வர் தகவல்
கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ₹338 கோடியே 95 லட்சத்தில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. சீனா நாட்டில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. நமது மாநிலத்தில் இல்லாவிட்டாலும், தேவையான தடுப்பு நடவடிக்கைகள் சுகாதார துறை வாயிலாக எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சர்கள் அன்பழகன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

Tags : Andhra Pradesh ,Telangana ,chiefs ,Cauvery ,Godavari ,CM , Godavari-Cauvery, merger plan, Andhra Pradesh, Telangana, CM, meet, talks, CM information
× RELATED தஞ்சாவூரில் காய்கறிகளின் விலை கிடு, கிடு உயர்வு