×

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க  இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு ஏராளமான மக்கள் சென்று வருகிறார்கள். இவ்வாறு திருவேற்காடு கோயிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணத்தோடு, நுழைவு கட்டணமும் சேர்த்து  வசூலிக்கப்படுகிறது.

நகராட்சி எல்லைக்குள் நுழையும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதிகள் உள்ள நிலையில், திருவேற்காடு கோயிலுக்கு செல்வதற்கான வாகன நுழைவு கட்டணத்தை மேலும் 3 ஆண்டுகள் வசூலிப்பதற்கான டெண்டரையும் கடந்த பிப்ரவரி 13ம் தேதி திருவேற்காடு நகராட்சி  ஆணையர் வெளியிட்டிருந்தார். எனவே விதிகளுக்கு முரணாக திருவேற்காடு எல்லைக்குள் நுழையும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க நகராட்சி ஆணையர் பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, நுழைவு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எ.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருவேற்காடு நகராட்சிக்குள் வரும் மக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. டெண்டர் தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் டெண்டரை இறுதி செய்யக்கூடாது. இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஆகியோர் ஏப்ரல் 1ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

Tags : Thiruvekkadu Karumariamman ,Thiruvenkadu ,Karumariyaman , Thiruvenkadu, Karumariyaman temple,, entrance fee, interim injunction, order
× RELATED அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக...