பல்லாவரம் அருகே பரபரப்பு: தொழிலாளி மீது வெடிகுண்டு வீச்சு?: நள்ளிரவில் மறைந்திருந்து தாக்கிய வாலிபர் கைது

சென்னை: பல்லாவரம் அருகே தொழிலாளியின் மீது வெடி பொருள் வீசி தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பல்லாவரம் அருகே பொழிச்சலூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (46). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் தனது மகளுக்கு நடந்த அறுவை சிகிச்சைக்காக சோழிங்கநல்லூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் பொழிச்சலூர் வந்தார். அப்போது, இருளில் மறைந்திருந்த 3 பேர் அடங்கிய மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சதீஷ்குமாரை தாக்கியது.

இதில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிச் சென்று, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது நண்பர்களிடம் கூறினார். இதனால் அவரது நண்பர்கள் சிலர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். அப்போது, சதீஷை தாக்கிய 3 பேரும் அங்கிருந்து தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் துணையுடன் அவர்களை மடக்கிப் பிடித்தபோது, அதில் இருந்த ஒருவன் வெடிகுண்டு போன்ற அதிக ஒலி எழுப்பும் மர்ம பொருளை தூக்கி வீசினான்.

அது பலத்த சத்தத்துடன் பெருமளவு புகையுடன் வெடித்துச் சிதறியது. இந்த நேரத்தில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவர் தப்பி ஓடினர். அப்போது, அந்த கும்பலை சேர்ந்த ஒருவனை பொதுமக்கள் பிடித்து சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பல்லாவரத்தை சேர்ந்த சூர்யா (21) என்பவரை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\

மேலும், காயமடைந்த சதீஷ்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய பூனை விக்கி (22), மதன் (21), அப்புனு (எ) ராஜேஷ் (22) உள்ளிட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே சென்னை தேனாம்பேட்டையில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தை போன்று, பொழிச்சலூரில் அதிக சத்தத்துடன் வெடிக்கக் கூடிய பட்டாசை வீசி தாக்குதல் நடந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories:

>