×

இத்தாலி சென்று திரும்பிய பெண் இன்ஜி.க்கு பாதிப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் ‘மைண்ட் ஸ்பேஸ்’ வளாகத்தில் செயல்படும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் இன்ஜினியர், இத்தாலியில் நடைபெற்ற திருமண விழாவில்  கலந்து கொண்டார். அங்கிருந்து சில நாட்களுக்கு முன் திரும்பிய அவருக்கு, கொரோனா அறிகுறிகள் இருந்ததால், ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தாலியில் இருந்து திரும்பிய பிறகு, தனது நிறுவனத்துக்கு சென்று சில நாட்கள் அவர் வேலை செய்துள்ளார். இதனால், அங்குள்ள ஊழியர்களும், மற்ற சாப்ட்வேர் நிறுவனங்களின் ஊழியர்களும் பீதி அடைந்துள்ளனர்.

இதனால், இந்த வளாகத்தில் செயல்படும் சாப்ட்வேர் நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், இங்குள்ள நிறுவனங்களை மூடவும் தெலங்கானா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இங்குள்ள ஊழியர்கள் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக குவிந்து வருகின்றனர்.

ஐடி ஊழியர்களுக்கு 14 நாள் விடுமுறை?
கொரோனா வைரஸ் பரவுவதால், பெங்களூருவில் இயங்கிவரும் பெரிய தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப  நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 14 நாட்கள்  சிறப்பு விடுமுறை அறிவிக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஐடிபிஎல்.,  இன்டெல், மான்யாத டெக்பார்க், இன்ேபாசிஸ் உள்பட பல முன்னணி ஐடி  நிறுவனங்களின் நிர்வாகிகள் நேற்று 2வது நாளாக ஆலோசனை நடத்தினர். இதில்  தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு  விடுமுறை வழங்கவும், அவர்கள் வீட்டில்  இருந்தபடி கம்ப்யூட்டர், லேப்டாப் மூலம் பணியாற்றும் (Work at Home)  அடிப்படையில் பணி செய்யும் வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளன. மேலும்,  தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் அனுமதி இல்லாமல்  வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

மூச்சு பரிசோதனை கருவி தற்காலிக தடை கோரும் பாஜ
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய, மூச்சு பரிசோதனை கருவியை நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா பீதி கிளம்பி உள்ள நிலையில் மூச்சு பரிசோதனை கருவி மூலமாகவும் இந்நோய் பலருக்கு பரவும் வாய்ப்புள்ளதாக டெல்லி பாஜ தலைவர் தஜிந்தர்பால் சிங் பக்கா எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில், ‘முறையாக பயன்படுத்தப்படாத மூச்சு பரிசோதனை கருவி மூலமாக கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, இக்கருவிக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை
கொரோனா வைரஸ் பீதியால் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் உள்ள சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதும் அவரது மகன் படிக்கும் பள்ளி உட்பட 2 பள்ளிகள் வரும் 9ம் தேதி வரை மூடப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு பள்ளி குர்கானில் உள்ள தனது 2 கிளைகளுக்கு இன்று முதல் முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவித்துள்ளது. சில பள்ளிகள் தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளன. 7 முதல் 11ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Inge ,Victim ,Italy ,Female Engineer , Corona Impact, Female Engineer, Returning , Italy
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்