×

இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை: பைனலுக்கு முன்னேற இந்தியா முனைப்பு

சிட்னி: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் அரை இறுதியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கிய இந்த தொடரில், மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின. ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. அதைத் தொடர்ந்து வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை அணிகளை தொடர்ச்சியாகப் பந்தாடிய இந்தியா ஏ பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியா (6 புள்ளி) 2வது இடம் பிடித்து அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. நியூசிலாந்து (4), இலங்கை (2), வங்கதேசம் (0) ஏமாற்றத்துடன் வெளியேறின. பி பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த தென் ஆப்ரிக்கா (7 புள்ளி), இங்கிலாந்து (6) அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. வெஸ்ட் இண்டீஸ் (3), பாகிஸ்தான் (3), தாய்லாந்து (1) அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்த நிலையில், பரபரப்பான அரை இறுதி ஆட்டங்கள் சிட்னியில் இன்று நடைபெறுகின்றன. முதலாவது அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. தொடர்ச்சியாக 4 வெற்றியுடன் கம்பீரமாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு அனுபவம் வாய்ந்த இங்கிலாந்து கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலக கோப்பையில் இதற்கு முன் இந்தியாவுடன் விளையாடிய 5 போட்டிகளிலும் இங்கிலாந்து அணியே வென்று ஆதிக்கம் செலுத்தி உள்ளது. 2018ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த தொடரின் அரை இறுதியில் இங்கிலாந்திடம் போராடித் தோற்ற இந்திய அணி, அதற்கு முன் 2009, 2012, 2014, 2016ல் லீக் சுற்றில் மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது. எனினும், நடப்பு தொடரில் ஒருங்கிணைந்து விளையாடி தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வரும் இந்திய அணி முதல் முறையாக பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டுகிறது. 16 வயது இளம் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா, அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

அவர் 4 இன்னிங்சில் 161 ரன் (அதிகம் 47, சராசரி 40.25) விளாசி உள்ளார். டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி சாதனை படைத்துள்ள ஷபாலி, தனது அதிரடியால் இந்திய அணியின் கோப்பை கனவை நனவாக்குவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜெமிமா, வேதா, ஷிகா, ராதா ஆகியோர் நடுவரிசையில் கணிசமாக ரன் குவித்து கை கொடுக்கின்றனர். லீக் சுற்றில் பெரிதாக சாதிக்க முடியாத கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா இருவரும் பார்முக்குத் திரும்பினால் இந்திய அணியின் வெற்றி உறுதி என அடித்துச் சொல்லலாம். பந்துவீச்சில் பூனம் யாதவ் மிரட்டி வருகிறார். இவரது சுழலில் இதுவரை 9 பேர் மூழ்கியுள்ளனர். ஷிகா பாண்டே 4 போட்டியில் 7 விக்கெட் கைப்பற்றி நம்பிக்கை அளிக்கிறார்.

அதே சமயம், ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணியின் நதாலியே ஸ்கிவர் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு 202 ரன் குவித்து (3 அரை சதம், சராசரி 67.33) முதலிடத்தில் உள்ளார். ஹீதர் நைட் 193 ரன்களுடன் (அதிகம் 108*, சராசரி 64.33) 2வது இடத்தில் உள்ளது இங்கிலாந்து அணியின் தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்து உள்ளது.
பைனலுக்கு முன்னேற இரு அணிகளும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: ஹர்மான்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிகியூஸ், ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஷிகா பாண்டே, பூனம் யாதவ், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஹர்லீன் தியோல், ராஜேஸ்வரி கெயக்வாட், ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ராகர்.

இங்கிலாந்து: ஹீதர் நைட் (கேப்டன்), டாமி பியூமான்ட், கேத்தரின் பிரன்ட், கேட் கிராஸ், பிரெயா டேவிஸ், சோபி எக்லெஸ்டோன், ஜார்ஜியா எல்விஸ், சாரா கிளென், ஏமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), நதாலியே ஸ்கிவர், அன்யா ஷ்ரப்சோல், மேடி வில்லியர்ஸ், பிரான் வில்சன், லாரன் வின்பீல்டு, டானி வியாட்.

Tags : India ,finals ,England , England, today multiple exams, advance , finals, India, initiative
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...