×

ரிசர்வ் வங்கி விதித்த தடை நீக்கம்: பிட்காயின் பரிவர்த்தனைக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம், இவற்றின் பரிவர்த்தனைக்கு சட்டப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளது. பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சிகள் டிஜிட்டல் வடிவில் உள்ள நாணயங்கள். இவை கம்ப்யூட்டர்கள் மற்றும் இதற்கான ஏடிஎம்கள் மூலமாக மட்டுமே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. வழக்கமாக ஒவ்வொரு நாடும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் கரன்சிகளுக்கு ஈடான மதிப்பை பிட்காயின்கள் கொண்டிருந்தாலும், இவற்றை பரிவர்த்தனை செய்வது பெரும் பணக்காரர்கள், பெரிய நிறுவனங்கள்தான். அதோடு, உலக அளவில் மிக அதிக மதிப்பிலான கரன்சியாகவும் இது உள்ளது. 16,100 கோடி டாலருக்கு கிரிப்டோ கரன்சி வர்த்தகம் நடைபெறுகிறது. நேற்று ஒரு பிட்காயின் மதிப்பு 0.39 சதவீதம் சரிந்து சுமார் 8,815 டாலராக இருந்தது. அதாவது, இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் 6.34 லட்சம். அதாவது, ஒரே ஒரு பிட்காயின் வாங்க 6.34 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

எந்த நாட்டின் மத்திய வங்கியும் இதை கட்டுப்படுத்த முடியாது. அரசு கட்டுப்பாட்டிலும் இவை இருப்பதில்லை. இதனால் இவற்றின் மதிப்பு அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன்தான் காணப்படும். பிட்காயினுக்கு அங்கீகாரம் உள்ள நாடுகளில் இதற்கான பிரத்யேக ஏடிஎம்கள் உள்ளன. இந்தியாவில் கூட, பிட்காயின் ஏடிஎம்கள் நிறுவப்பட்டன. பெங்களூருவில் யூனோகாயின் என்ற கிரிப்டோ நாணய ஏஜென்சி, கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை ஏஜென்சியை துவக்கியது. ஆனால் சில நாட்களிலேயே இந்த ஏடிஎம் நிறுவியவர்களை போலீசார் கைது செய்தனர்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு, பிட்காயின் மீதான பிடியை இறுக்கியது. இருப்பினும் சட்ட விரோத ஏஜென்சிகள் மூலம் பரிவர்த்தனை நடக்கத்தான் செய்கிறது.

பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்வோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு ஏற்கெனவே திட்டமிட்டது. அதோடு, இந்தியாவுக்கு என அரசே பிரத்யேக கிரிப்டோ கரன்சி வெளியிடவும்  முடிவு செய்தது. பிட்காயினில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என போலீஸ் தரப்பிலும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, கடந்த 2018 ஏப்ரல் 6ம் தேதி, இந்தியாவில் பிட்காயின் பரிவர்த்தனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. பிட்காயின் ஏஜென்சிகள் இந்த டிஜிட்டல் கரன்சிகளின் பரிவர்த்தனைகளில் ஈடுபடக்கூடாது.

இதுபோல், இதில் முதலீடு செய்த நபர்கள், நிறுவனங்களுக்கு பரிவர்த்தனைக்கு உதவுவது உட்பட எந்த வகையிலும் ஈடுபடக்கூடாது. இதை தொடர்ந்து பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபடும் நிறுவனங்கள் பல மூடப்பட்டன. இது பிட்காயினில் முதலீடு செய்துள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவை எதிர்த்து, கிரிப்டோ கரன்சி ஏஜென்சிகள் சார்பில், இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் பரிவர்த்தனை மற்றும் இவற்றில் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையை நீக்கியது. இதன்மூலம் இவற்றின் பரிவர்த்தனைக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபடும் நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், ‘‘கிரிப்டோ கரன்சி தடையை நீக்கியது வரவேற்புக்கு உரியது. ரிசர்வ் வங்கி தடையால் இந்தியாவில் செயல்பட்ட கிரிப்டோ ஏஜென்சிகள் பல மூடப்பட்டன. இனி இவை மீண்டும் செயல்பட வழிவகை கிடைத்துள்ளது’’ என்றனர்.

Tags : Reserve Bank of India ,Supreme Court , Bitcoin Transaction, Permit, Supreme Court, Order
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு