×

முதியவர் மீது போலீஸ் வாகனம் மோதியதை தட்டிக்கேட்ட வாலிபர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல்: காவல் நிலையத்தை மக்கள் முற்றுகை

சென்னை: முதியவர் மீது போலீஸ் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதை தட்டிக்கேட்ட வாலிபரை இன்ஸ்பெக்டர் சரமாரியாக அடித்து உதைத்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இச்சம்பவம் திருப்போரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான விஐபிக்கள், கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் திருப்போரூர் இஸ்பெக்டர் ரஜேந்திரன், தனது ஜீப் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது, சன்னதி தெருவில் இன்ஸ்பெக்டர் வாகனம் சென்றபோது, சாலையோரம் தென்னை ஓலைகளை அகற்றி கொண்டிருந்த முனுசாமி (80) என்ற முதியவரின் மீது ஜீப் லேசாக உரசியது. இதனால், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அந்த நேரத்தில், அப்பகுதியில் தேர் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த, பாதம் தாங்கிகள் குழுவை சேர்ந்த முரளி (30) என்ற வாலிபர், போலீசாரிடம், ‘‘இப்படி முதியவரை இடித்து விட்டு செல்கிறீர்களே, பார்த்து கவனமாக செல்லக்கூடாதா?’’ என கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அந்த வாலிபரை அழைத்து பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரை, அழைத்து சென்று காவல் நிலையத்தில் உட்கார வைத்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பாதம் தாங்கிகள் குழுவை சேர்ந்த வாலிபர்கள், காவல் நிலையம் முன்பு திரண்டனர். அங்கு, போலீசார் அழைத்து சென்ற வாலிபரை விடுவிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விஐபி முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொண்டதால் கண்டித்தேன் என்றும், விபத்தில் காயமடைந்த முதியவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தார். மேலும், வாலிபரை விடுவித்து, பொதுமக்களுடன் அனுப்பி வைத்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : police station ,attack ,Inspector ,plaintiff ,siege ,attacker , plaintiff, inspector, attack, police station, siege of people
× RELATED பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை