×

பிளவுபடுத்துவதால் யாருக்கும் பயனில்லை வெறுப்பு, வன்முறை வளர்ச்சியின் எதிரி: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: `வெறுப்பும், வன்முறையும் வளர்ச்சியின் எதிரிகள். பிரிவினையைப் பரப்புவதால் நாட்டிற்கு எவ்வித பயனுமில்லை,’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த வாரம், சிஏஏ எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 46 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், கலவரத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஒரு குழுவும், எம்பி.க்கள் அடங்கிய மற்றொரு குழுவும் நேற்று அப்பகுதிகளுக்கு சென்றன.  ராகுல் தலைமையிலானக் குழுவில், கே.சி. வேணுகோபால், அதிர் ரஞ்சன் சவுத்ரி, கே. சுரேஷ், முகுல் வாஸ்னிக், குமாரி செல்ஜா, கவுரவ் கோகாய், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

பிரஜ்புரியில் உள்ள கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்ற இக்குழுவினர், அங்கு சூறையாடப்பட்ட வகுப்பறைகளையும், எரிந்த நிலையில் இருந்த பேருந்துகளையும் பார்த்தனர். பின்னர், ராகுல் அளித்த பேட்டியில், ``இது (பள்ளியைக் காண்பித்து) தான் இந்தியாவின் எதிர்காலம். வெறுப்பும், வன்முறையும் இதனை அழித்து விட்டன. இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. வெறுப்பும் வன்முறையும் வளர்ச்சிக்கு எதிரானவை. இந்தியா பிளவுபடுத்தப்பட்டு, எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாரத மாதாவுக்கு (நாட்டிற்கு) எந்த பயனும் இல்லை,’’ என்றார்.

Tags : Anyone ,Rival ,Gandhi , National Citizenship Act, Violence, Rahul Gandhi
× RELATED குஜராத் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல்