×

சிலை திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் கொள்ளையன் கைது: சிங்கப்பூரில் இருந்து வந்தபோது சிக்கினான்

கும்பகோணம்: திருச்சி அருங்காட்சியகத்தில் நடந்த சிலைகள் திருட்டு வழக்கில் 11ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையனை நேற்றுமுன்தினம் திருச்சியில் கைது செய்தனர். திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் 2009ம் ஆண்டு 31 சிலைகள் கொள்ளை போனது. இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து 9 பேரை கைது செய்தனர்.  பின்னர் அவர்களிடமிருந்து 21 பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியான காரைக்குடி நெற்புகைபட்டியை சேர்ந்த சரவணபெருமாளை (40) தேடி வந்த நிலையில், அவர் சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் தமிழகம் திரும்பிய சரவணபெருமாள், நேற்றுமுன்தினம் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்தபோது சிலை தடுப்பு பிரிவு டிஎஸ்பி.கதிரவன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் கும்பகோணத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாதவராமானுஜம் வீட்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஆஜர்படுத்தினர்.  17ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து சரவணபெருமாள் நேற்று அதிகாலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பட்டுக்கோட்டையில் உள்ள உதயசூரியபுரம் அடகு கடையில் 6 கிலோ தங்கம் திருடிய வழக்கிலும் சரவணபெருமாள் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Robbery suspect ,idolatry Robbery , Statue theft case, robbery arrest, Singapore
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது