×

டெல்லி கலவரம் குறித்து தொடர் அமளி: நாடாளுமன்றம் 3வது நாளாக முடங்கியது

புதுடெல்லி: டெல்லி கலவரம் பற்றி விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய அமளி காரணமாக இரு அவைகளும் 3வது நாளாக ஒத்திவைக்கப்பட்டன.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் டெல்லியில் நடந்த பேரணியில் கலவரம் வெடித்தது. இதில், 46 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய முதல் 2 நாளும் இரு அவையிலும் எந்த அலுவலும் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. 3வது நாளான நேற்றும் அமளி தொடர்ந்தது. மாநிலங்களவையில் டெல்லி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென விதி 267ன் கீழ் அவை ஒத்திவைப்பு நோட்டீசை காங்கிரஸ் மூத்த எம்பி.க்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா கொடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்படாததால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதேபோல், மக்களவையிலும் காங்கிரஸ் எம்பி.க்கள் கடும் அமளி செய்தனர். அக்கட்சியின் அவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் எம்பி.க்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு ‘நீதி வேண்டும், நீதி வேண்டும்’ என கோஷமிட்டனர். மேலும், அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காட்டியதுடன், டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும் கோஷமிட்டனர். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘ஹோலி பண்டிகைக்குப் பிறகு மார்ச் 11ம் தேதி டெல்லி விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது. இதை ஏற்கனவே அவையில் தெரிவித்தும் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே அவையை நடத்தவிடாமல் அமளி செய்கின்றனர்,’’ என்றார். துணை சபாநாயகர் கிரித் சோலங்கி, அமளிக்கு இடையே கேள்வி நேரத்தை நடத்தினார். ஆனாலும், கூச்சல் குழப்பம் அதிகரித்ததால்,  அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் அவை தொடங்கியதும் அதே போல அமளி நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.  டெல்லி விவகாரத்தால் தொடர்ந்து 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விவாத் சே விஸ்வாஸ் மசோதா நிறைவேற்றம்
பிற்பகலுக்குப்பின் மக்களவை தொடங்கியதும் கடும் அமளிக்கு இடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘விவாத் சே விஸ்வாஸ்’ மசோதாவை அறிமுகம் செய்தார். நேரடி வரி விதிப்பு தொடா்பான நிலுவை வழக்குகளைக் குறைக்கும் வகையில் ‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. ₹9.32 லட்சம் கோடி மதிப்பிலான 4.83 லட்சம் நேரடி வரி தொடர்பான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இவற்றை விரைந்து முடிக்கும் வகையில் விவாத் சே விஸ்வாஸ் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது நிதி மசோதா என்பதால், அமளிக்கு இடையே உடனடியாக நிறைவேற்றப்பட்டது.


Tags : Series ,Delhi ,Parliament , Delhi Riots, Parliament
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...