×

டிரம்ப் பேசிய சில மணி நேரத்தில் ஆப்கானில் தலிபான்கள் திடீர் தாக்குதல்: ராணுவ வீரர்கள், போலீசார் 20 பேர் பலி: அமைதி ஒப்பந்தம் கேள்விக்குறியானது

குண்டூஷ்: தலிபான் இயக்கத்தின் அரசியல் தலைவர் முல்லாவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசிய சில மணி நேரத்தில் ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் பலியாகினர்.  ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா -  தலிபான் தீவிரவாதிகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் `ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களது படைகளை விரைவில் முழுமையாக விலக்கிக் கொள்வது என அமெரிக்காவும், அல் கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளப் போவதாக தலிபான்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.   இந்நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டிரம்ப், தலிபான்களின் அரசியல் விவகாரத் தலைவர் முல்லா பராதாருடன் 35 நிமிடம் தொலைபேசியில்  தீவிரவாதம் தொடர்பாக பேசினார்.

இது தொடர்பாக வாஷிங்டனில் பின்னர் ேபட்டியளித்த டிரம்ப், `தலிபான் தலைவர் முல்லாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்திருந்தது. அவர்கள் வன்முறையை நிறுத்த போவதாக தெரிவித்துள்ளனர்,’ என குறிப்பிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் தலிபான்கள் குண்டூஷ் மாவட்டத்தின் இமாம் ஷாகிப் பகுதியில் உள்ள 3 ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 10 ராணுவ வீரர்கள், 4 போலீசார் என 14 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல், அன்று இரவு மத்திய உருஷ்கான் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இவ்விரு இடங்களிலும் மொத்தம் 20 பேர் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். அதிபர் டிரம்ப் தலிபான் தலைவருடன் தொலைபேசியில் ேபசிய சில மணி நேரங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தாக்குதலால் அமெரிக்கா - தலிபான்கள் இடையே நடந்த அமைதி ஒப்பந்தத்தின் நிலையும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

அமெரிக்கா பதிலடி:
தலிபான்கள் தாக்குதலுக்கு பதிலாக அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்தியது. தலிபான்கள் நேற்று முன்தினம் இரவு ஆப்கனின் தென்பகுதி மாகாணமான நாரே சராஜில், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதில், ஆப்கன் வீரர்கள், போலீசார் 20 பேர் இறந்தனர். இதற்கு பதிலடியாக, அமெரிக்கா தலிபான்கள் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தியது. ஆனால், இதில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அமைதி ஒப்பந்தத்துக்கு பின்னர் தலிபான்கள் மீது அமெரிக்கா நடத்தும் முதல் தாக்குதல் இதுவாகும்.

Tags : attack ,Army ,Afghanistan ,Trump ,Taliban ,soldiers , Trump, Afghan, Taliban, attack
× RELATED ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம்...