×

சங்கரன்கோவில் அருகே திறப்பு: தென்னிந்தியாவில் முதன்முறையாக உலக அமைதிக்கான புத்த கோபுரம்: புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டது

சங்கரன்கோவில் மார்ச் 5:  20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த புத்த துறவி நிட்சு தட்சு பியூஜீ குருஜீ என்பவர் உலகத்தில் அமைதி நிலவ உலகம் முழுவதும் புத்த அமைதி கோபுரங்களை உருவாக்கி அமைதி ஏற்படுத்த முயன்றார். தாமரை சூத்திரத்தை புத்தர் முதன்முதலில் உபதேசம் செய்த பீகார் மாநிலம் ராஜ்கீர் மலையில், ஜவஹர்லால் நேரு உதவியுடன் புத்த அமைதி கோபுரத்தை அமைத்தார். தொடந்து 6 வடஇந்திய மாநிலங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இதேபோல் தென்னிந்தியாவில் முதன் முதலாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்திலும் புத்தர் அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இதே கிராமத்தை சேர்ந்த முத்தையாவும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2000ம் ஆண்டு புத்தர் கோயில் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைதியான சூழலில் அமையப்பெற்ற இந்த இடத்தில் நிப்போசன் மியொ ஹொஜி தமிழ்நாடு, மற்றும் புத்த பிட்சுகள், புத்த பிக்குனிகள் சார்பில் கோயில் கட்டப்பட்டது.

150 அடி விட்டமும், 100 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ள இக்கோபுரம் திறப்பு விழா, கோபுரத்தில் புத்தர் அஸ்தி வைக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்தியாவிற்க்கான மங்கோலிய தூதர் கன்பொல்டு தலைமை வகித்தார். நிப்பொன்சன் மியொஹொஜி அமைப்பின் தமிழ்நாடு தலைவர் கனகசபாபதி வரவேற்றார். நிகழ்ச்சியை முன்னிட்டு புத்த துறவிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் உலக அமைதி கோபுரத்தில் காலை 10.31 மணிக்கு புத்தர் அஸ்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புத்ததுறவிகள் மற்றும் பொதுமக்கள் உலக அமைதி கோபுரத்தை சுற்றி வந்து வழிபாடு நடத்தினர்.  நிகழ்ச்சியில் புத்தர் கோயில் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய வீரிருப்பு முத்தையா குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, வேல்ஸ் குழும தலைவர் சண்முகசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Buddha ,South India , Sankarankoil, South India, Buddhist tower, Buddha's ashes
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது