×

கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறை, இயந்திரம் வாடகை உயர்வு; பழைய நடைமுறையை பின்பற்றி அறுவடை பணி தீவிரம்: நெல்லும், வைக்கோலும் சேதாரமின்றி கிடைக்குது

நெல்லை: விவசாய கூலித்தொழிலாளர் பற்றாக்குறை, அறுவடை இயந்திரத்தின் வாடகை உயர்வு காரணமாக விவசாயிகள் பழைய நடைமுறையை பின்பற்றி அறுவடை பணியில் ஈடுபட்டனர். இதனால் சிந்தாமல் சிதறாமல் நெல்மணிகளும், வைக்கோலும் கரை சேர்ந்தன. பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. பாபநாசம் அணை பாசன பகுதிகளில் ஆண்டு தோறும் கார், பிசானம் ஆகிய இரு பருவ சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து, அணைகள் வறண்டதால் விவசாய பணிகள் நடைபெறவில்லை. விவசாய பணிகள் இன்றி விவசாய கூலி தொழிலாளிகள் பிழைப்பு தேடி கேரளா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி சென்றனர். இன்னும் சிலர் விவசாய நிலத்தை விற்று நகர்ப்புறங்களில் குடியமர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் அணைகள், குளங்கள் பெருகின. நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயகள் நெற் பயிர் சாகுபடி செய்தனர். தற்போது பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் காணப்படுகிறது. இதனால் அறுவடை பணிகள் தீவிரமடைந்து வருகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களிலும் அறுவடை பணிகள் நடப்பதால் தேவையான விவசாய கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. அறுவடை இயந்திரங்களும் தேவைக்கேற்ப இல்லாத நிலை காணப்படுவதால் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அறுவடை இயந்திரங்கள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரத்து 700 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பாடுபட்டு பயிர் செய்து விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்யும் விவசாயிகள் புலம்பி தவிக்கின்றனர்.

ஏற்கனவே வங்கிகளில் கடன் பெற்று உழுது, பயிரிட்டு, உரமிட்டு பயிரை பாதுகாக்க பெரும்தொகை செலவழித்த விவசாயிகள், அறுவடைக்கும் பெரும்தொகை செலவழிக்க வழியின்றி திணறுகின்றனர். இதற்கு தீர்வாக பல விவசாயிகள் பழைய முறைப்படி குடும்பம் குடும்பமாக நெல் அறுப்பு பணியில் களமிறங்கியுள்ளனர். நெல்லை அருகே கருப்பந்துறை தெற்கு பாடகசாலை பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் நிலத்தில் இறங்கி அறுவடை பணியை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று நபர்கள் வயலில் இறங்கி பயிர்களை அறுவடை செய்து வரப்புகளில் வைத்து விடுவர். இதனை இருவர் தலையில் சுமந்து களத்திற்கு கொண்டு சேர்ப்பர். இப்படியாக களத்திற்கு கொண்டு வரப்பட்ட நெல்பயிர்களை களத்தில் கதிரடித்து நெல்மணிகளை உதிரவிடுவர். உதிராத நெல் மணிகளோடு பயிர்களை தரையில் பரப்பி வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை அதன் மீது வலம் வர வைத்து மீதமுள்ள நெல் மணிகளையும் உதிர வைக்கின்றனர்.

இதைதொடர்ந்து வைக்கோல்களை அகற்றி விட்டு நெல்மணிகளை மூட்டை கட்டி வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து கருப்பந்துறை தெற்கு பாடகசாலையை சேர்ந்த விவசாயி சுப்புராஜ் கூறுகையில்; அம்மன் பொன்னி புதிய ரக நெல் பயிர் செய்துள்ளனே். இதன் வாழ்நாள் 110 முதல் 115 நாளாகும். தற்போது நல்லா விளைந்து அறுவடை நிலையில் உள்ளது. ஆனால் விவசாய கூலி தொழிலாளர்கள் தற்போது கிடைப்பதில்லை. விளைந்த நெல்லை அறுவடை செய்ய விவசாய துறையில் அறுவடை இயந்திரங்கள் போதிய அளவு இல்லை. அறுவடை இயந்திரங்கள் வாடகை கட்டுபடியாக வில்லை.

எனவே பழைய முறையில் களத்தில் இறங்கி குடும்பத்துடன் அறுவடை பணிகளை செய்து வருகிறேன். ஒரு ஏக்கர் நிலத்தில் தற்போது அறுவடை செய்கிறோம். 2 அல்லது 3 நாட்கள் ஆகும். அதிகாலை வந்து முடிந்த மட்டும் பயிர்களை அறுவடை செய்து நெல்மணிகளை சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு எடுத்து செல்கிறோம். இதனால் வைக்கோலும் பாதிக்கப்படாமல் கால்நடைகளின் தீவனத்துக்கு ஏற்ற வகையில் கிடைக்கிறது. இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் வைக்கோல்களை பெரும்பாலும் கால்நடைகள் தின்பதில்லை. விலையும் குறைவாக போகிறது என்றார்.

Tags : wage laborers , Shortage of wage laborers, machine hikes, harvest work
× RELATED ஈரோடு மாநகராட்சி தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அமல்