×

புளியங்குடி அருகே மீண்டும் யானைகள் அட்டகாசம்: வாழை, தென்னை மரங்கள் சேதம்

புளியங்குடி: புளியங்குடி வனச்சரகம் சோமரந்தான், கோட்டைமலை பீட் பகுதிகளில் 2, 3 பிரிவுகளாக யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளன. கடந்த இரு வாரமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை கூட்டம் அருகேயுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து நெல், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் புளியங்குடி பீட் பகுதியை ஒட்டியுள்ள அப்துல் வஹாப்(60) தோட்டத்தில் இரவில் மீண்டும் புகுந்த யானைக்கூட்டம், தென்னை மரங்களை வேரோடு சாய்த்தன. அருகேயுள்ள காஜாமைதீன் தோட்டத்தின் முன் பக்க கதவையும் சேதப்படுத்தின.

மேலும் மைதீன்பிச்சை என்பரது தோட்டத்தில் புகுந்த யானைகள் தண்ணீர் செல்லும் குழாய்களை உடைத்தன. தொடர்ந்து புளியங்குடி ஜின்னா நகர் 2வது தெருவைச் சேர்ந்த முகமதுஅலி ஜின்னா (65). என்பவரது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து 3 வயதுடைய தென்னை மரங்களை துவம்சம் செய்தன. தகவலறிந்த புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின், வனவர் அசோக்குமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று யானை கூட்டத்தை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுட்டுள்ளனர்.

நெருப்பு உண்டாக்கியும் பட்டாசுகள் வெடித்தும் டமாரம் அடித்து ஒலி எழுப்பியும் யானையை விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உரிய நிவாரணத்தை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Puliyankudi , Puliyankudi, Elephants, Attakasam
× RELATED புளியங்குடி வீராசாமி செட்டியார் இல்ல திருமண வரவேற்பு விழா