×

நாகர்கோவில் மாநகர் பகுதியில் தூசி படியும் உணவுகள்; கடைகளுக்கு வெளியே உணவு தயாரிக்க தடை: 160 உணவகங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

நாகர்கோவில்: தமிழகத்தில் புரோட்டா கடைகள் முளைக்க தொடங்கிய காலம் முதல், சமையலறையில் உணவு தயாரித்த காலம் மலையேறி கடைக்கு வெளியே சாலையில் உணவு தயாரிக்கும் கலாசாரம் தொடங்கியது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டது. சிறிய கடைகள் தொடங்கி பெரிய உணவகங்களிலும் கூட கடைக்கு முன்பு புரோட்டா, சிக்கன் பொரிப்பு, இட்லி, தோசை தயாரித்தல் புற்றீசலாக பரவி விட்டது. இது தவிர சில பகுதிகளில் பொது மக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்ரமித்தும் உணவு தயாரிக்கப்படுகிறது. பரபரப்பான சாலைகளில் இப்படி உணவு தயாரிக்கும் போது, பலத்த காற்று வீசும் போதும், வாகனங்கள் செல்லும் போதும், சாலையில் உள்ள தூசி, வாகனங்களின் புகை ஆகியவை புரோட்டா, சிக்கன் பொரிக்கும் எண்ணெய், தோசை கல்லில் படருகிறது.

இதனால் பெருமளவு சுகாதாரக்கேடு ஏற்பட்டு இந்த உணவை சாப்பிடுவோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் உணவுகளின் சுவையும், மணமும் படித்தவர், படிக்காதவர்கள், சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்ப்பதால் மருத்துவம் பயின்றவர்கள் கூட இதுபோன்ற சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி செல்கின்றனர். இதுதவிர சிக்கன், பீப் போன்றவற்றை தோசைக்கல்லில் ப்ரை செய்யும் போது, அதில் தூவப்படும் மிளகாய் வற்றல் பொடி சாலைகளில் செல்வோரின் கண்களில் விழுந்து கண் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இதில் வாகனங்களில் செல்கின்றவர்கள் தடுமாறி விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகின்றன. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் முதன் முறையாக இதுபோன்ற சாலையோரம் மற்றும் திறந்த வெளியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரிப்பதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் கின்சால் ஆகியோர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். அதன்படி நாகர்கோவில் மாநகராட்சியில் திறந்த வெளியில் உணவு தயாரிக்கும் உணவகங்கள் குறித்து சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 160 உணவகங்கள் இவ்வாறு செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி இன்று (4ம் தேதி) தொடங்க உள்ளது.
இதுகுறித்து மாநகர் நல அலுவலர் டாக்டர் கின்சால் கூறியது: நாகர்கோவில் மாநகராட்சியில் கடைகளுக்கு வெளியே சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவது கண்டறிப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கும் 160 கடைகளுக்கு உணவுகளை சமையல் அறையில் வைத்து தயாரிக்க நடவடிக்கை எடுக்கும்படி 15 நாள் அவகாசம் அளித்து 4ம் தேதி முதல் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

பெரும்பாலும் இவ்வாறு உணவு தயாரிப்பவர்கள், கடைக்கு வெளியே சாலையோர நடைபாதை, கழவுநீரோடைகளை ஆக்ரமித்தே வைத்துள்ளனர். எனவே அவகாசம் முடிந்த பின்னரும் கடைக்கு வெளியே உணவு தயார் செய்பவர்கள் மீது மாநகராட்சி சட்டப்படி கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மெல்ல கொல்லும் விஷமாக...
பெரும்பாலான டீ கடைகளில் வடை, பஜ்ஜி ஆகியவை பலமுறை பயன்படுத்திய எண்ெணயில் தயாரிக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இந்த எண்ெணயை உறிஞ்ச பலரும், அச்சிடப்பட்ட தாள்களை பயன்படுத்துகின்றனர். வடை பார்சல் செய்யவும் அச்சிட்ட தாள் பயன்படுத்தப்படுகின்றன. திருவிழா கடைகளிலும் இதேமுறைதான் பின்பற்றப்படுகின்றன. அதிலும் பல தாள்கள் தூசு படிந்து, அழுக்காகவும், பூச்சிகளின் எச்சங்களுடன் காணப்படுகின்றன. இந்த பேப்பரில் தின்பண்டங்களை மடக்கும் போதும், எண்ணெயை உறிஞ்ச பயன்படுத்தும்போதும் தாளில் அச்சிட பயன்படுத்திய மை உணவு பொருளில் படர்ந்து அதன் நிறம் மாறுகிறது.

அத்துடன் மையின் ரசாயனம் தின்பண்டங்களில் கலந்து மெதுவாக கொல்லும் விஷமாக மாறுகிறது. எனவே வடை, தின்பண்டங்களை அச்சிடப்பட்ட தாளில் பார்சல் செய்யவும், அதில் வைத்து உண்ணவும் உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. இதற்கு பதிலாக சுத்தமான வாழை இலை அல்லது சுத்தமான வெள்ளை தாள், டிஸ்யூ பேப்பர்களை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது. இதை கண்டுகொள்ளாத பெரும்பாலான கடைகளில் அச்சிடப்பட்ட தாளையே வடைகள் வைத்து உண்பதற்கும், பார்சலுக்கும் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : restaurants ,city ,Nagercoil ,shops ,City of Dusty Foods , Municipality, Prohibition, Corporation, Notices in Nagercoil
× RELATED வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட்