×

அதிக கட்டணம் வசூல், பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் தெரிவிக்க வடசேரி கட்டண கழிவறையில் மைக் வசதியுடன் கேமரா

காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைப்பு
மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை

நாகர்கோவில்: வடசேரி பஸ்நிலைய கட்டண கழிவறையில் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் மைக் வசதியுடன் கண்காணிப்பு கேமராக அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் செயின் பறிப்பு, திருட்டு, அடிதடி மற்றும் விபத்துகளை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்லும் வாகனங்களை கண்டறியும் வகையில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் படி மாநகராட்சி பொதுநிதியில் இருந்து  ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், கிறிஸ்துநகர், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, வடசேரி, மீனாட்சிபுரம், கோட்டாறு, செட்டிக்குளம், ராமன்புதூர், கலெக்டர் அலுவலக சந்திப்பு, டெரிக் சந்திப்பு பகுதிகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இவை எஸ்.பி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனால், நகரப்பகுதிகளில் ஓரளவு செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. இந்நிலையில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலைய கட்டண கழிவறைகளில் மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தன. மேலும் பல்வேறு பாலியல் புகார்கள் வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு கட்டண கழிவறைக்கு வந்த தம்பதியினரிடம், கூடுதல் கட்டணம் வசூலித்ததை கணவர் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இதனை கண்ட குத்தகைதாரர் படம் எடுத்தவரின் வீட்டு பெண்களை சம்பந்தப்படுத்தி அருவருப்பாக திட்டியுள்ளார். இதனால், கண்ணீர் விட்டு கதறிய கணவர், ஆணையர் சரவணக்குமாரிடம் நேரில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து சம்மந்தப்பட்ட குத்தகைதாரரை அழைத்து விசாரணை செய்தார்.

அதில் சம்பவம் உறுதியானதால்,  காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு அந்த குத்தகைதாரர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதியதாக ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டண முறைகேடு உள்ளிட்ட புகார்களை உடனடியாக தெரிவிக்கும் வகையில், குத்தகைதாரரே, அவரது செலவில் கட்டண கழிவறையின் பணம் வசூல் பகுதியில் கேமரா அமைக்கவும், அதனை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று மாலை வடசேரி பஸ் நிலைய கட்டண கழிவறையில், பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. கழிவறை வரவேற்பு பகுதி முற்றும் முன்பகுதி மட்டும் தெரியும் வகையில் இந்த கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கேமரா அருகே ஒரு மைக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் நபர்கள் இந்த கேமரா முன் நின்று மைக்கில் புகார் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக கேமரா அருகே அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக கட்டண கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் பாலியல் சீண்டல் புகார்களை தெரிவிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் வைத்திருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை வாடகை வாகன நிறுத்தும் இடங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : High fees, collections, sexual seduction, toiletries, camera
× RELATED ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட...